2016ஆம் ஆண்டே திருமணம்; நயன்-விக்கி இரட்டைக் குழந்தை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியினர் 2016ஆம் ஆண்டே பதிவுத் திருமணம் செய்து கொண்டனர் என்றும், விதிமுறைகளுக்கு உட்பட்டே அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளனர் என்றும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.  தமிழ் சினிமாவில் லேடி…

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியினர் 2016ஆம் ஆண்டே பதிவுத் திருமணம் செய்து கொண்டனர் என்றும், விதிமுறைகளுக்கு உட்பட்டே அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளனர் என்றும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. 

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக தற்போது வலம் வரும் நயன்தாரா, ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துப் பிரபலமானவர். இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இதையடுத்து, இவர்களது திருமணம் மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி  நடைபெற்றது.

இதனையடுத்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தாய் தந்தையாகி உள்ளதாக, தங்களது இரட்டைக் குழந்தைகளுடன் கூடிய புகைப்படத்தை, விக்னேஷ் சிவன் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்டதாக நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி தெரிவித்தனர்.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்களும், கேள்விகளும் எழுந்தன. அவர்கள் விதிமீறி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதாக காவல் ஆணையரகத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா முறையாக, விதிகளுக்கு உட்பட்டு குழந்தை பெற்றனரா என்பது குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

அதன்படி இந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரால் 13.10.2022 உயர்மட்ட விசாரணை குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் மூலமாக அவர்கள் குழந்தை பெற்றுள்ளனர்.மேலும் அவர்களுக்கு 11.03.2016 அன்று பதிவுத் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த திருமண பதிவு சான்றிதழின் உண்மைத்தன்மை பதிவுத் துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ICMR விதிகளின்படி வாடகைத் தாய் உரிய வயது பெற்றுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வாடகைத் தாய்க்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.  ICMR வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டே விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியினர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.