முத்துராமலிங்கத் தேவர் தங்கக் கவசம்; ஓபிஎஸ், இபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு

முத்துராமலிங்கத் தேவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் எடுத்துச் செல்லும் அதிகாரத்தை ராமநாதபுரம் டிஆர்ஓவுக்கு வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பசும்பொன்னிலுள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அணிவிக்க முன்னாள் முதலமைச்சர்…

முத்துராமலிங்கத் தேவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் எடுத்துச் செல்லும் அதிகாரத்தை ராமநாதபுரம் டிஆர்ஓவுக்கு வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பசும்பொன்னிலுள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அணிவிக்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தங்க கவசத்தை வழங்கினார்  முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் அன்று மட்டும் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படும். மற்ற நாட்களில் பத்திரமாக வங்கி லாக்கரில் வைக்கப்படும்.

தற்போது அதிமுக இரு தரப்பாக பிரிந்துவிட்ட நிலையில், பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிய எடப்பாடி பழனிசாமி தரப்பு திண்டுக்கல் சீனிவாசனை நியமித்தது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.


இந்த நிலையில் தங்க கவசத்தை எடுத்துச் செல்லும் அதிகாரத்தை வழங்க கோரி இபிஎஸ் தரப்பு அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது வங்கி தரப்பிலும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலயம் தரப்பிலும் நீதிமன்ற உத்தரவிற்கு கட்டுப்படுவதாக தெரிவித்திருந்தனர். ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு தங்க கவசத்தை ஒப்படைக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த மனு இன்று மீண்டும் நீதிபதி பவானி சுப்புராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, ராமநாதபுரம் டிஆர்ஓ பொறுப்பில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு  தங்க கவசத்தை வங்கியில் இருந்து எடுத்து சென்று அணிவித்து, மீண்டும் வங்கியில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ராமநாதபுரம் காவல்துறையினர் கவசத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், இந்த உத்தரவு இந்த ஆண்டிற்கு மட்டுமே எனவும் உத்தரவில் கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.