முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தடைகற்களை படிகற்களாக்கிய…இருளர் சமூகத்தின் முதல் பெண் வழக்கறிஞர் காளியம்மாள் கதை

மலைக்காடுகளின் நடுவே வாழ்ந்து அரசுப்பள்ளிக்கு நடந்தே சென்று கல்வி கற்று இருளர் இன சமூகத்தின் முதல் பெண் வழக்கறிஞராகியுள்ளார் காளியம்மாள்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தமிழக கேரள எல்லையில் மலை முகடுகளுக்கு அருகே கோபனாரி என்ற மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த மருதன் ஆன்டிச்சி தம்பதியின் ஒரே மகள் தான் காளியம்மாள். இவரது பெற்றோர்களுக்கு கால்நடைகளை வளர்ப்பது மற்றும் கிடைக்கும் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தினை நடத்தி வந்தனர்

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இருளர் இன சமூகத்தினை சார்ந்திருந்ததனால் காளியம்மாளின் பெற்றோருக்கு போதிய கல்வி அறிவு இல்லை. அதனால் தனது மகளை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்று காளியம்மாளின் தாய் தந்தை முயற்சித்தனர். இந்நிலையில் ஆரம்ப கல்வியை அருகே இருந்த கோபனாரி அரசுப்பள்ளியில் துவங்கி, மேல்நிலை கல்விக்கு சுமார் 10 கிலோ மீட்டர் பயணித்து சீளியூர் அரசுப் பள்ளிக்கு சென்றார் காளியம்மாள். பேருந்து வசதி போதிய அளவில் இல்லாத இந்த மலை கிராமத்தில் இருந்து பல இன்னல்களுக்கு மத்தியிலும் போராடி தனது பள்ளி படிப்பை காளியம்மாள் முடித்தார்.

பள்ளி பருவத்தில் பயிலும் போதே தனது கிராமத்திற்கு கல்வி குறித்தும், சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த தனது கிராமத்திற்கு வருகை தந்த வழக்கறிஞரின் ஊக்கம் காரணமாகவும் தனது சமூகத்திற்கு இதுவரை கிடைக்காமல் இருக்கும் உரிமைகளை பெற தானும் ஒரு வழக்கறிஞராக வேண்டும் என பள்ளி பருவத்தில்
முடிவு செய்துள்ளார்.

பண்ணிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த பிறகு சட்டக்கல்லூரியில் சேரவிண்ணப்பித்தும்
காளியம்மாளை கலந்தாய்வுக்கு அழைத்து செல்ல போதிய வசதி இல்லாததால் அவரது கனவு நீர்த்துபோனது. இதனையடுத்து கோவையில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்து படித்தார். பட்டபடிப்பு முடித்தவுடன் தனது வழக்கறிஞர் கனவை விடாமல் மீண்டும் விண்ணப்பித்து கலந்தாய்வுக்கு சென்று மதுரை சட்டக்கல்லூரியில் தனது படிப்பை காளியம்மாள் துவங்கினார்.

கல்லூரியில் சேர்ந்த ஒரே வாரத்தில் அவரது தந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு கால்கள் செயல் இழந்து,வலிப்பு நோய் ஏற்பட்டது. காளியம்மாளுக்கும் வலிப்பு நோய் ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார். இதனால் மதுரையில் காளியம்மாளுக்கு சிகிச்சை, கோவையில் அவரது தந்தைக்கு சிகிச்சை என்ற நிலை உருவானது. இதனால் அவரது வழக்கறிஞர் கனவு மீண்டும் முடங்கும் சூழல் ஏற்பட்டது.

கல்லூரியில் படிக்கும் போது காளியம்மாளுக்கு ஏற்பட்ட வலிப்பு நோய் காரணமாக கடும் உடல் பிரச்சினைக்கு ஆளாகியுள்ளார். இதனால் பக்கபலமாக அவருடன் பயிலும் சக மாணவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பல்வேறு சிக்கலால் அந்த குடும்பமே தவித்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் உள்ள மகேஸ்வரன் என்ற மருத்துவரும் கோவையை சேர்ந்த சுதாகர் என்ற சமூக ஆர்வலரும் காளியம்மாளின் வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற உறுதியை என்னி
அவருக்கு தேவையான உதவிகளை செய்தனர்.

அவரை மீண்டும் படிப்பில் கவனம் செலுத்தவும் படிப்பை கைவிடாமல் தொடரவும் ஊக்கமளித்தனர். இதனால் தனது உடல் பிரச்சினை மற்றும் குடும்ப சிக்கல் போன்ற பல்வேறு கஷ்டங்களை தான்டி இன்று தனது வழக்கறிஞர் படிப்பை முடித்து தமிழகத்தின் முதல் இருளர் இன சமூகத்தின் பெண் வழக்கறிஞராகி வாழ்வில் சாதித்து அசத்தியுள்ளார்.
இதனை அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காளியம்மாளை நேரில் அழைத்து பாராட்டினார்.

தனது நீண்ட போராட்டத்தில் ஒவ்வொரு நாளும் கடினம் என என்னி துவண்டு போய் நிற்காமல் வாழ்வில் தனக்கு என ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல்
ஒட்டுமொத்த இருளர் இன, மலைவாழ் மக்களின் சமூகத்தின் அடையாளமாக மாறியுள்ளார் காளியம்மாள்.

காடுகளின் நடுவே வாழ்ந்து படிப்பறிவு பெற நீண்ட நெடிய நடை பயணங்களை தொடர்ந்து இன்று சட்டம் என்ற ஒளி விளக்கை பெற்றுள்ள காளியம்மாள் தனது அறியாமை சமூகத்திற்கு ஒரு வெளிச்சமாகவும் சட்டத்திற்கு உண்மையாகவும் பணியாற்றுவதே தனது வாழ்வின் லட்சியமாக இருக்கும் என தெரிவித்தார்.

-பரசுராமன்.ப 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

24 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

EZHILARASAN D

உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனை வேகமாக சார்ஜ் செய்ய வேண்டுமா?

Arivazhagan Chinnasamy

நேஷ்னல் ஹெரால்டு வழக்கு–விசாரணைக்கு ஆஜரானார் சோனியா காந்தி

Mohan Dass