திருமணம் செய்து வைத்த ChatGPT! தம்பதிகளின் புதிய முயற்சி!

அமெரிக்காவில் சாட்ஜிபிடி (ChatGPT) என்ற செயற்கை நுண்ணறிவு பாட் முன்னிலையில் ரீஸ் வீஞ்ச், டெய்டன் ட்ரூட் தம்பதியினர் திருமணம் செய்துகொண்டனர்.  தொழிநுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம்…

அமெரிக்காவில் சாட்ஜிபிடி (ChatGPT) என்ற செயற்கை நுண்ணறிவு பாட் முன்னிலையில் ரீஸ் வீஞ்ச், டெய்டன் ட்ரூட் தம்பதியினர் திருமணம் செய்துகொண்டனர். 

தொழிநுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் நாள்தோறும் உருவாகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் மூலம் சமீபத்தில் உருவான ChatGPT தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட OpenAI-ன் ChatGPT, உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்து, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சாட்ஜிபிடி என்றழைக்கப்படும் இந்த செயற்கை நுண்ணறிவு சாட்பாட் (Chatbot), நாம் வைக்கும் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் கேள்விகளுக்கு, பதில்களை கொடுக்கும் ஒரு விரிவான மொழிக் கருவியாகும். இது, தொழில்நுட்பத்தில் ஏற்படும் பரிணாம வளர்ச்சியின் புதிய நிலைகளுக்கு, நம்மை தயார்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் 23 வயதான ரீஸ் வீஞ்ச் மற்றும் 26 வயதான டெய்டன் ட்ரூட் ஆகியோர் கடந்த வாரம் அவர்களது நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் 30 பேர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் வழக்கமான திருமணங்களைப் போலன்றி, தேவாலயத்தில் அருட்தந்தைக்கு மாறாக, ChatGPT உதவியுடன் இயங்கும் ஒரு இயந்திரத்தால் நடத்தப்பட்டது.

இந்த இயந்திரம் முதலில் விழாவில் ஒரு வரவேற்பு உரையை நிகழ்த்தி, பின் திருமண விழாவை நடத்திவிட்டு இறுதியில் நிறைவு குறிப்புகளுடன் விழாவை முடித்து வைத்தது. இவர்கள் திருமணத்தை நடத்துவதற்கு ஆரம்பத்தில் சாட்ஜிபிடி தயக்கம் காட்டியதாக தம்பதியினர் தெரிவித்தனர். அதில், “மன்னிக்கவும், என்னால் இதைச் செய்ய முடியாது, எனக்கு கண்கள் இல்லை, எனக்கு உடல் இல்லை, உங்கள் திருமணத்தை என்னால் செய்து வைக்க முடியாது” என்று கூறியுள்ளது. ஆனால் செயற்கை நுண்ணறிவு பாட்டை பயன்படுத்தி, இந்த திருமணம் இறுதியாக நிகழ்த்தப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.