நாமக்கல்லில் ஏரியில் கழிவுநீர் கலப்பதால், நகராட்சி சார்பில் குளத்தில் விடப்பட்ட மீன்கள் அதிகளவில் இறந்து மிதக்கின்றன.
நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியில், நகராட்சிக்கு சொந்தமான 17.5 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி 2015 – 2020 ஆண்டுகளில் புனரமைக்கப்பட்டு, ஏரியைச் சுற்றியும் பாதை அமைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.
இந்த ஏரியில் கெண்டை, கெளுத்தி, கட்லா உள்ளிட்ட மீன் வகைகளும் மற்றும் வாத்துகளும் நகராட்சி சார்பில் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், கொண்டிசெட்டிப்பட்டி, பெரியப்பட்டி, கே.கே நகர், முல்லை நகர், சிங்கிலிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் இந்த ஏரியில் கலப்பதால், ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மீன்கள் செத்து கடும் துர்நாற்றம் வீசுவதால், குளத்தில் அருகே வசிக்கும் குடியிருப்புவாசிகளும், நடைபயிற்சி மேற்கொள்பவர்களும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும், இந்த குளத்தை புனரமைக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நகராட்சி சார்பில் சுமார் ரூ.67.20 லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு, இந்தாண்டு மே மாதம் பணி முடிவடைய உள்ளதாக நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எவ்வித பணிகளும் தற்போது வரை துவங்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
புனரமைப்பு பணிகளை விரைவில் துவங்க வேண்டும் எனவும் கழிவு நீர் குளத்தில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
—-சௌம்யா.மோ






