இக்கட்டான தருணத்தில் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவது இல்லை என மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
மணிப்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் பதவி விலகப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. எதிர்க்கட்சிகளும் அவர் பதவி விலக வேண்டும் எனக் கூறி வந்த நிலையில், இன்று பிற்பகல் அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவை, பிரேன் சிங் சந்தித்தார். இதனால், அவர் பதவி விலகலாம் என தகவல் பரவியது.
இதனை தொடர்ந்து, ராஜினாமா கடிதத்தை, ஆளுநரை சந்தித்து கொடுப்பதற்காக வருவார் என்பதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆளுநர் மாளிகைக்கு முன்பாக சாலையில் திரண்டு பிரேன் தனது பதவியை ராஜினாமா செய்ய கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தவிர அவரது ஆதரவாளர்கள் முதலமைச்சர் பைரனிடம் இருந்த ராஜினாமா கடிதத்தை கிழித்தெறிந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் , முதலமைச்சர் பதவியில் இருந்து விலக போவது இல்லை என்று பிரேன் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தான் பதவி விளகப்போவதாக வந்த தகவலை மறுத்துள்ள அவர் , மணிப்பூரில் சுமர் இரண்டு மாதங்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கு பாதுகாப்பிற்காக ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த முக்கியமான தருணத்தில், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா








