கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து.!

புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சித் தொடங்குவார் என்று என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில்,  நேற்று அவர் அரசியல் கட்சியை…

புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சித் தொடங்குவார் என்று என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில்,  நேற்று அவர் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.  அவர் தொடங்கியுள்ள கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இக்கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் விஜய் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடமும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,  “என்னைப் பொறுத்தவரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல.  அது ஒரு புனிதமான மக்கள் பணி.

அரசியலின் உயரம் மட்டுமல்ல,  அதன் நீள அகலத்தையும் அறிந்துகொள்ள எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்துத் தயார்ப்படுத்தி மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன்.  தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்ததும், கட்சியின் சின்னம், கொடி ஆகியவைற்றை வெளியிடுவோம். ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு முழுமையாக அரசியலில் ஈடுபடுவேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது..

“ வெளிநாடு சென்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன்  புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு தொலைபேசி மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்தார். இன்று எடுத்துள்ள முடிவுக்கு பாராட்டுக்களும், வரும் 2026-ல் தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்தார்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.