கடினமான காலகட்டத்தில் என்னை நம்பி படம் கொடுத்தவர் மணிரத்னம் என பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா 29.03.2023 அன்று சென்னை பெரியமேட்டில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், நேற்று மாலை 6 மணிக்கு துவங்கி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுடன் திரைத்துரையினர் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நடிகர் சிலம்பரசன் மேடைக்கு வந்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். ஆரவாரம் சில நிமிடங்கள் நீடித்தது.
இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிலம்பரசன் தெரிவித்ததாவது..
எனது குரு மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இங்கு இருக்கிறார்கள். பதற்றமாக உள்ளது. நான் கடினமான காலகட்டத்தில் இருக்கும்போது என்னை நம்பி படம் கொடுத்தவர் மணிரத்னம். என்னை பொறுத்தவரை மணிரத்னம் சின்ன குழந்தை.
ஒரு விஷயம் வேண்டுமென்றால் விடாமல் முயற்சி செய்து முடித்துவிடுவார். இதை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். தற்போது நான் காலையில் படப்பிடிப்புக்கு எழுந்து போகிறேன் என்றால் அதற்கு மணிரத்னம் தான் காரணம். சுபாஸ்கரன் நல்ல மனிதர். ஏஆர் ரகுமான் பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை. பத்து தல படம் நேற்றுதான் பார்த்தேன் பிண்ணியெடுத்துவிட்டார். அவர் தொடர்ந்து உழைத்துக்கொண்டு இருக்கிறார்.
விக்ரம் தங்கலான் படத்தில் சூப்பராக நடித்திருக்கிறார். மற்றவர்கள் கதாபாத்திரமும் இரண்டாம் பாகத்தில் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது. இன்னும் இரண்டு பாகங்கள் எடுங்கள் நான் பார்ப்பேன். நாளைக்கு பத்து தல ரிலீஸ் என்பதால் பதற்றமாக உள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்னம் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பேன். குந்தவையா நந்தினியா என்ற கேள்விக்கு இரண்டு கண்களில் எந்த கண்ணு என்று கேட்டால் எப்படி. எந்த கண்ணை மூடவேண்டும் என்று நான் பாத்துக்கறேன் ” என சிலம்பரசன் தெரிவித்தார்







