திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆசியாவிலேயே 5 நிலை ராஜகோபுரமும் விநாயகருக்கென தனி ஆலயமும் கொண்ட கோவில் திருநெல்வேலி சந்திப்பு மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் திருக்கோவில். இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு நாயக்க பாண்டிய மன்னர்கள் ஆண்ட காலங்களில் சிறப்பான வழிபாடுகள் நடந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
இக்கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் அதிகாலை முதல் நடந்து வருகிறது. மேலும் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம் நடைபெற்றது. இதில் கணபதிக்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 26 வகையான அபிஷேகமும் மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
சித்திரை திங்கள் முதல் நாள் தொடங்கி மூன்று நாட்கள் சூரிய ஒளி நேராக மூலவர் மீது படும் அரிய நிகழ்வு நடைபெறும். இத்தகைய நிகழ்வு சித்திரை ஒன்றாம் தேதியான இன்று நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். அதனைதொடர்ந்து மீண்டும் சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடைபெற்றது.
—அனகா காளமேகன்




