கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே, 16 வயது சிறுமியை திருமணம் செய்த 36 வயது தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பரிசோதனைக்குகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை பதிவிற்காக அவருடைய தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்யும்போது, அந்த பெண்ணின் வயது 16 என்பது தெரியவந்தது. பின்னர் மருத்துவமனை நிர்வாகம் சார்பாக, குழந்தைகள் திருமண தடுப்பு பிரிவுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அந்த சிறுமி அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், இவரை ஆரல்வாய்மொழி அருகே உள்ள குமாரபகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவர் திருமணம் செய்துக்கொண்டதும் உறுதியானது. அருள்ராஜ் அப்பகுதியிலுள்ள செங்கல்சூளையில் வேலை பார்த்து வருகிறார். இதையடுத்து, 16 வயது சிறுமியை திருமணம் செய்த அருள்ராஜ் மீது போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







