ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மற்றும் குடியுரிமைச் சட்டங்களை எதிர்த்து, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய மானாமதுரை திமுக சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, வேளாண் பெருமக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அப்போது விளக்கமளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நாள் முதல், அந்த சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி வருவதாக கூறினார்.
தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள உழவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற மாநில அரசு உறுதியாக இருக்கிறது. ஆளுநர் உரை மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருவதால் இப்போது, தீர்மானம் நிறைவேற்றுவது மரபாக இருக்காது என்பதால், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் உறுதியளித்தார்.
மேலும் சிறுபான்மையின மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.







