அமெரிக்க நாடாளுமன்றம் மீது திடீர் தாக்குதல்!

அமெரிக்க நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடல் கட்டிடத்தின் மீது அடையாளம் தெரியாத நபர் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஓட்டி வந்த கார் கேபிடல் கட்டிடத்தின் பாதுகாப்பு…

அமெரிக்க நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடல் கட்டிடத்தின் மீது அடையாளம் தெரியாத நபர் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஓட்டி வந்த கார் கேபிடல் கட்டிடத்தின் பாதுகாப்பு தடுப்புக்களை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றது. அதனைத் தொடர்ந்து காரிலிருந்த நபர் கத்தியுடன் அருகிலிருந்த காவலரை தாக்க முற்பட்டுள்ளார். காவலர் இந்த தாக்குதலை தடுக்க துப்பாக்கியால் சுட்டதில் மர்ம நபர் படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த நபர் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தாக்குதலில் ஈடுபட்ட நபரின் அடையாளங்களை காவல்துறை வெளியிடவில்லை. இதில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் மற்றொரு காவல்துறை அதிகாரி படுகாயமடைந்துள்ளார்.

இதன் பின்னணியில் பயங்கரவாதிகளின் தொடர்புகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லையென வாஷிங்டன் பெருநகர காவல்துறைத் தலைவர் ராபர்ட் கான்டி தெரிவித்துள்ளார். அதிபர் ஜோ பைடன் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த ஜனவரியில் ட்ரம்ப் தரப்பு ஆதரவாளர்கள் இதே போல் கேபிடல் கட்டிடத்தில் வன்முறையில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.