மின்கம்பி அறுந்து விழுந்து முதியவர் உயிரிழந்த நிலையில், மழையில் நனைந்தபடி கேட்பாரின்றி சாலையில் சடலம் கிடந்த சம்பவத்துக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவைப் பார்க்க வந்த முதியவர் சந்திரன் என்பவர் சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையிலும் மின் வாரியத்தின் சார்பில், மின்சாரத்தை
நிறுத்தவில்லை. மேலும், இறந்துகிடந்த முதியவர் சந்திரனின் உடலை யாரும்
கண்டுகொள்ளாத நிலையில் மழையில் நனைந்தபடி பரிதாபமாக சாலையில் கிடந்தது.
இதையடுத்து, முதியவரின் சடலம் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இப்பகுதியில் அடிக்கடி மின் கம்பி பழுதாகி அறுந்து விழுவதாக மின் வாரியத்திற்கு பொதுமக்கள் புகார் அளித்தும் கண்டுகொள்ளாத நிலையில் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சோழவந்தான் போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
-ம.பவித்ரா







