தாயாரின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி

தனது தாயாரின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு வரும் சனிக்கிழமை அன்று 100வது பிறந்த…

தனது தாயாரின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு வரும் சனிக்கிழமை அன்று 100வது பிறந்த நாள் வருகிறது. தற்போது அவர் குஜராத்தின் காந்திநகரில் தனது மற்றொரு மகனான பங்கஜ் மோடியுடன் வசித்து வருகிறார்.

அவரது 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அகமதாபாத்தில் உள்ள ஜகன்னாதர் ஆலயத்தில் பொது விருந்துக்கு பிரதமர் மோடியின் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

இதேபோல், ஹீராபென் நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்திக்கும் வகையில், அவர்களின் சொந்த ஊரான வத்நகரில் பல்வேறு ஹோமங்களை நடத்தவும் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

தனது தாயாரின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு குஜராத் செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

சனிக்கிழமை அன்று குஜராத் செல்லும் பிரதமர், வடோதரா நகரில் உள்ள பவகத் கோயிலில் வழிபாடு மேற்கொள்கிறார். பின்னர், வடோதராவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச இருக்கிறார்.

இதையடுத்து காந்திநகர் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தனது தாயாரை சந்தித்து ஆசி பெற இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.