மாமல்லபுரம் நுழைவு வாயிலில் 45 அடி உயரத்தில் அலங்கார மின் விளக்குகளுடன் அமைக்கப்பட்ட யானை, மயில், சிங்கம் சிற்பங்களுடன் கூடிய சிற்பத்தூணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் யுனெஸ்கோவால் அஙகீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய சின்னங்கள் உள்ள முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது. இங்குள்ள அர்ச்சுணன் தபசில் உள்ள யானை, சிங்கம், மயில் சிற்பங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் முக்கிய சிற்பங்களாக திகழ்கிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாமல்லபுரம் நகரின் புகழை பறைசாற்றுகின்ற வகையிலும், அர்ச்சுணன் தபசு சிற்பங்களை நினைவு படுத்துகின்ற வகையில் தமிழக அரசின் கைவினை கலைஞர் தொழில் வளர்ச்சி கழகத்தின் கீழ் பூம்புகார் நிறுவனம் சார்பில் 45 அடி உயர சிற்பத்தூண் மாமல்லபுரம் நுழைவு வாயில் பகுதியில் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. முதலில் சிமெண்ட் காங்கிரிட்டில் தூண் அமைக்கப்பட்டு, பிறகு தூணின் நான்கு புறமும் நவீன பிளாஸ்டர் பாரிஸ் மூலம் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
https://twitter.com/CMOTamilnadu/status/1552300588616290304
இத்தூணின் கீழ் பகுதியில் நான்கு புறமும் குட்டியுடன் கூடிய யானை சிற்பமும், தூணின் மத்திய பகுதியில் மயில் தோகையை விரித்து ஆடுகின்ற வகையில் மயில் சிற்பமும், தூணின் ஊச்சி பகுதியில் சிங்கம் சிற்பமும் அழகுர அமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக கடற்கரை உப்பு காற்று அரிக்காத வகையில் நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இத்தூண் அமைக்கப்பட்டு உள்ளது. 100 சதவித பணிகள் முடிக்கப்பட்ட இத்தூணில் இரவில் ஜொலிக்கும் வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்டு தற்போது மின் விளக்கு வெளிச்சத்தின் அழகுர காட்சி அளிக்கிறது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்கப்பட உள்ள நிலையில் இங்கு வரும் முக்கிய பிரமுகர்கள், சர்வதேச செஸ் வீரர்கள, ரசிகர்கள், சுற்றுலா பயணிகள் இதனை கண்டுகளிக்கும் வகையில் தமிழ்நாடு கைவினை கலைஞர் வளர்ச்சி கழகத்தின் சார்பில் நிறுவப்பட்ட இந்த சிற்ப தூணை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.







