மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்திய பிளஸ் 2 தேர்வு நாடு முழுவதும் பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை நடைப்பெற்றது. இந்த ஆண்டு தேர்விற்கு 17,80,365 மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 17,68,968 பேர் தேர்வெழுதினர். இந்த நிலையில் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு தேர்வில் 15,07,109 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதன் மூலம், தேர்ச்சி விகிதம் 85.20 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 3.19 சதம் குறைவாகும். தேர்வு முடிவுகளை cbse.gov.in, cbseresults.nic.in, என்ற இணைய முகவரிகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
அதிகப்பட்சமாக திருவனந்தபுரத்தில் 95.62 % தேர்ச்சி பதிவாகியுள்ளது. இரண்டாவதாக சென்னை 93.84 சதவீதமும், மூன்றாவது இடத்தில் பெங்களூர் 93.19 சதவீதமும், நான்காவது இடத்தில் விஜயவாடா 92.77 சதவீதமும், ஐந்தாவது இடத்தில் தில்லி மேற்கில் 92.34 சதவீதமும் பெற்றுள்ளன. இந்தாண்டு தேர்வில் 82.13 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேநேரம் 88.86 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே 6.73 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், தேர்த்தி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 15 அன்று துணைத் தேர்வுகளை சி.பி.எஸ்.இ நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







