புதிதாக ஓட்டுப்போட வருபவர்கள் அரசியலை புரட்டிப் போடுவார்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மதுரை அவனியாபுரத்தில் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது, மதுரையில் அனைத்துப் பகுதிகளிலும் தொழிற்சாலை கொண்டு வருவது மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பு என்று தெரிவித்த கமல்ஹாசன், அனைத்து பகுதிகளிலும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவது வேட்பாளரின் பொறுப்பு என கூறினார்.
5 வருடத்துக்கு ஒருமுறை ரூ.5,000 கொடுத்து மக்களின் வாழ்க்கையை குத்தகைக்கு எடுத்துக் கொள்கிறார்கள் என்று குற்றம்சாட்டியதோடு, தமிழக அரசியலை புரட்டிப் போட வந்திருக்கும் கட்சி மக்கள் நீதி மய்யம் கட்சி எனக் கூறினார்.
ஊழல் கட்சிக்கு மாற்று மற்றொரு ஊழல் கட்சி இல்லை, நேர்மையான கட்சிதான் வன்முறையாளர்களை ஒடுக்குவதற்கு சட்டப்படி செயல்படும் என்றும், புதிதாக ஓட்டுப்போட வருபவர்கள் அரசியலை புரட்டிப் போட வருகிறார்கள், அதனை அமைதியாக செயல்படுத்தி காட்டுவோம் என்றார். மேலும், மத நல்லிணக்கம், சிறுபான்மையினர் பாதுகாப்பு உள்ளிட்டவைகளை பேச மக்கள் நீதி மய்யத்திற்குதான் உரிமை உள்ளதெனவும் கமல்ஹாசன் கூறினார்.







