அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்-சுகாதாரத்துறை

தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் உத்தரகண்ட், உ.பி, கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் மாநில அதிகாரிகளுடன் மத்திய…

தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் உத்தரகண்ட், உ.பி, கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் மாநில அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.

அதில் அம்மாநிலங்களில் கொரோனா தொற்று நிலவரம் தொடர்பாகவும், தடுப்பு நடவடிக்கை நிலவரம் மற்றும் தடுப்பூசி நிலவரம் தொடர்பாக மீளாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் கடைப்பிடிக்க மாநில நிர்வாகத்துக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தலை சந்திக்கும் 5 மாநிலங்களிலும் முதல் டோஸுக்கு தகுதியான அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்கவும், இரண்டாவது டோஸ் செலுத்த வேண்டியவர்களுக்கு அது கிடைப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FILE

இம்மாநிலங்களிலும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும் தொற்று பரவல் திடீரென உயர்வதை கட்டுப்படுத்த தற்போதிலிருந்தே அதற்காக திட்டமிட்டு, அனைத்து வகையான தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும், மருத்துவ உள்கட்டமைப்புகள், தேவையான மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மாவட்டம்தோறும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த உரிய உக்திகளை வகுத்து, அந்த உக்திகளை செயல்படுத்துவதை உறுதி செய்ய தினம்தோறும் மீளாய்வு கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அனைத்து மாநில தலைமைச்செயலாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷன் நாளை காலை 11.30 மணியளவில் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.

இதில் 15-18 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்தும், ஒமிக்ரான் பரவல் தடுப்பு குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் 5 மாநில தேர்தல்களை நடத்துவது குறித்து சில கருத்து வேறுபாடுகள் மேலெழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.