எனக்கு நடனம் ஆட தெரியாது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, ஜூனியர் என்டிஆர், ராம் சரண், உதயநிதி, சிவகார்த்திகேயன் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய உதயநிதி, “பாகுபலி 2 வெற்றியை இந்த படம் நிச்சயம் முறியடிக்கும். எல்லோரும் நடனம் ஆடினால்தான் கழுத்து வலிக்கும். ஆனா எனக்கு அத பார்த்தாலே கழுத்து வலிக்கும். எனக்கு நடனம் ஆட தெரியாது.” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,
“சத்யம் திரையரங்கில் 6 திரை உள்ளது. அதில் 5 திரையில் இந்த படம்தான் வெளியாகும் என்று நான் உறுதி அளிக்கிறேன்.” என்றும் கூறியுள்ளார்.
உதயநிதியை தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன், “இயக்குநர் ராஜமௌலியின் மிகப்பெரிய ரசிகன் நான். கனவுகளை அடைய நினைப்பவர்களுக்கு ராஜமௌலி ஒரு முன்னுதாரணம். படக்குழுவினரின் அசாதாரண உழைப்பு ஸ்கிரீனில் தெரிகிறது.” என்று கூறினார்.
மேலும், “இது ஒரு இந்தியன் படம். தென்னிந்தியா, வட இந்தியா எல்லாம் கிடையாது. கொரோனா காலத்தில் சினிமாத்துறை கடினமான சூழலில் உள்ளது. அடுத்த ஆண்டின் வலிமை, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களின் வெளியீட்டால் திரைத்துறை மீண்டும் உயிர்பெறும். அனைவரும் திரையரங்கில் சென்று இப்படத்தை பாருங்கள்.” என்று பேசினார்.
இதனையடுத்து “ரெண்டு பெரிய நடிகர்கள் ஒன்றாக சேர்ந்து நடித்தால் எப்படி இருக்கும். ரஜினி கமல் சேர்ந்து நடித்த போது எப்படி இருந்தது. பாலசந்தர் அதை செய்து விட்டார். எங்களுக்கு இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி. இது முடிவு இல்லை இதுதான் தொடக்கம்.” என ஜூனியர் என்டிஆர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். ராஜமௌலிக்கு நன்றி. என்மீது நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரம் அளித்ததற்கு. பிராந்திய மொழிகளுக்கு இருந்த அனைத்து தடைகளையும் உடைத்தவர் ராஜமௌலி. இப்படத்தின் ராம்சரணுடன் இணைந்து நடித்த ஒவ்வொரு காட்சியிலும் நான் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன்.” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து ராம்சரண் பேசியதாவது, “ராஜமௌலிக்கு நன்றி. உங்களைப்பற்றி பேச இந்த மேடை பத்தாது. நான்தான் தமிழ் டப்பிங் பேச வேண்டும் என்று ராஜமௌலி சொன்னபோது பயமாக இருந்தது. மதன்கார்க்கி எனக்கு உதவி செய்தார். எல்லோருக்கும் நன்றி சொல்வேன். ஆனால் என்டிஆருக்கு சொல்ல மாட்டேன். என் மனதில் அவரை வைத்துள்ளேன். ரசிகர்களுக்கு நன்றி.” என்றார்.
இறுதியாக உரையாற்றிய ராஜமௌலி, “தமிழ் தாய்க்கு வணக்கம். சென்னை மாநகருக்கு வணக்கம். 13 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு முன்தொகை கொடுத்தால் பல ஆண்டுகள் இந்த படத்தை அவருக்கு கொடுத்துள்ளேன். இப்படத்தின் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளருக்கு நன்றி. எனக்கு 50 வயது ஆகிறது. இப்போதும் என் அப்பா அவர் மேல் என்னை வைத்து உலகத்தை சுற்றி காட்டுகிறார். இந்திய மண்ணில் இருக்கும் ஒரு புரட்சி, இந்திய மண்ணில் இருக்கும் ஒரு கலாச்சாரம் அதுதான் இப்படம். இந்த மாதிரி படம் பண்ண இருவர் வேண்டும். நல்ல நண்பர்களாக சகோதரர்களாக அப்படி பட்ட இருவர்தான் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண்.” என்றார்.







