21 குண்டுகள் முழங்க மேஜர் ஜெயந்த் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்!

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்த் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செய்யப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.  இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை அருணாசலப்பிரதேசத்தின்…

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்த் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செய்யப்பட்டு, தகனம் செய்யப்பட்டது. 

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை அருணாசலப்பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த லெப்டினன்ட் வி.வி.பி.ரெட்டி மற்றும் அவரது உதவி விமானி மேஜர் ஜெயந்த் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர்.

இந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி ஜெயந்த் என்பவர் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஜெயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி சாரதா என்ற மனைவி உள்ளார். ஜெயந்தின் மறைவால் அவரது கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது

இதனிடையே உயிரிழந்த மேஜர் ஜெயந்த்தின் உடல் விமானப்படை விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மேஜர் ஜெயந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை மதுரையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்திற்கு மேஜர் ஜெயந்தின் உடல் கொண்டு செல்லப்பட்டது. ஜெயந்த் உறவினர்கள், கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டு அவரது உடலுக்கு  அஞ்சலி செலுத்தினர்.

இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு மேஜர் ஜெயந்த் உடல் மயானத்திற்கு வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு மேஜர் ஜெயந்த் உடலுக்கு ராணுவ மரியாதை செய்யப்பட்டு வானத்தை நோக்கி 21 குண்டுகள் முழங்கப்பட்டன. தொடர்ந்து ஜெயந்த் உடலுக்கு அவரது தந்தை ஆறுமுகம் இறுதிச் சடங்கை செய்து முடித்து உடலுக்கு தீ மூட்டினார்.

முன்னதாக, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ மேஜர் ஜெயந்த்தின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பாக அறிவிக்கப்பட்ட 20 லட்ச ரூபாய் காசோலையை ஜெயந்த் மனைவி சாரா ஸ்ரீ இடம் ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,  வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.