மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான திரு தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை அம்பாள் உடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தேரோட்டத்தில் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
—கோ சிவசங்கரன்







