கடந்த இரண்டு போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதால் அதன் கேப்டன் தோனி அதிருப்தியில் உள்ளார்.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற லக்னோ அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 57 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக மொயின் அலி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸின் பந்து வீச்சு குறித்து கடுமையான விமர்சங்கள் எழுந்து வருகின்றன. சிஎஸ்கே வின் வேகப் பந்து வீச்சாளர்கள் கடுமையாக சொதப்பியதால் முதல் ஆட்டத்தில் தோல்வியும் இரண்டாவது போட்டியில் கடும் சிரமத்திற்கு மத்தியிலும் வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர்களான மொயீன் அலியும், மிட்சலும் போட்டியில் ஆடவில்லை எனில் இரண்டாவது போட்டியிலும் சிஎஸ்கே தோல்வியை சந்தித்திருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
போட்டியின் முடிவில் பேசிய சிஎஸ்கே கேப்டன் மஹேந்திர சிங் தோனி பந்து வீச்சு குறித்து தனது கடுமையான அதிருப்தியை தெரிவித்துக் கொண்டார். பந்து வீச்சு இப்படியே தொடர்ந்தால் சிஎஸ்கே அணி இன்னொரு கேப்டனின் தலைமையில் ஆட வேண்டியிருக்கும் என அந்த பேட்டியில் தோனி தெரிவித்தது சிஎஸ்கே அணியினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
முதல் போட்டியிலும் பந்து வீச்சில் சொதப்பிய சென்னை அணியினரிடம் கடுமையான அதிருப்தியை தெரிவித்திருந்த நிலையில் நேற்றைய போட்டியிலும் பந்து வீச்சி மோசமாக இருந்தது. கடந்த இரண்டு போட்டிகளிலும் 16 வைட் பால்களும் 5 நோ பால்களும் சென்னை அணியின் சார்பாக எக்ஸ்ட்ரா ரன்களாக வழங்கப்பட்டது.
எனவே பந்து வீச்சில் முறையாக கவனம் செலுத்தவில்லை எனில் இன்னொரு கேப்டனின் தலைமையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் என தோனி எச்சரித்துள்ளது அணியினர் மத்தியில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
– யாழன்







