இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் மகா சிவராத்திரி கொண்டாடப்படும் என்ற அறிவிப்பிற்கு எதிராக கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்து அறநிலையத் துறையின் சார்பில் இந்த வருடம் மகா சிவராத்திரி அனைத்து சிவாலயங்களிலும் கொண்டாடப்படும் என்றும் அன்றைய நாளில் வண்ண விளக்குகளால் கோவில்கள் அலங்கரிக்கப்பட இருப்பதாகவும், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் விழாவில் 40,000 பேர் பங்கேற்க இருப்பதாக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “இந்து அறநிலையத் துறை அதிகாரிகள், அமைச்சர் போன்றவர்களின் பணி என்பது பூஜை புனஷ்காரங்களில் ஈடுபடுவதோ, செயல்படுவதோ அல்ல. கோவில் சொத்து, வரவு – செலவுகளைக் கண்காணிப்பதும், சரி பார்ப்பதும், நிர்வகிப்பதும் மட்டும் தான் என தெரிவித்துள்ளார்.
‘இந்து அறநிலையத் துறை அமைச்சர் பணி என்பது – ஆறு மரக்கால் அரிசி என்றால், அதைச் சரியாக அளந்து போடுகிறார்களா என்று கண்காணிப்பதே தவிர, பூஜை புனஷ்காரங்களில் ஈடுபடுவது இல்லை’ என்று நாவலர் நெடுஞ்செழியன் அழுத்தம் திருத்தமாகச் சொன்னதாக குறிப்பிடும் கி. வீரமணி, அந்த செயலை, பெரியார் ‘பலே, பலே நெடுஞ்செழியன்’ என்று பாராட்டியதாக சுட்டி காட்டுகிறார்.
மேலும், இந்து அறநிலையத் துறை அதற்குரிய பணிகளை மட்டும் செய்யட்டும் என்பதே நமது வேண்டுகோள் எனவும், ஒரு சிலரைத் திருப்தி செய்ய என்பதற்காக விதிகளை, மதச் சார்பற்றவர்களது மனதில் புண்ணை ஏற்படுத்தலாமா? என்று கேள்வி எழுப்பும் அவர், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சினையில் சிறப்பாக செயல்பட்ட அமைச்சர், இதில் முரணாக ஈடுபடலாமா?” என்றும் கி.வீரமணி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.