சென்னை கபாலீஸ்வரர் கோவில் சார்பில் சிவராத்திரியை ஒட்டி இன்று மாலை முதல் நாளை காலை வரை அனைத்து நிகழ்ச்சிகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் மகா சிவராத்திரி கொண்டாடப்படும் என்ற அறிவிப்பிற்கு எதிராக கி.வீரமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை நேரில் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, கபாலீஸ்வரர் கோவில் சார்பில் சிவராத்திரி நிகழ்ச்சி நடைபெறுவது தொடர்பாக விளக்கம் அவரிடம் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை கபாலீஸ்வரர் கோவில் சார்பில் சிவராத்திரியை ஒட்டி இன்று மாலை முதல் நாளை காலை வரை அனைத்து நிகழ்ச்சிகளும் திட்டமிட்டபடி நடைபெறும் எனக் கூறினார். மேலும், இன்று பெரியார் திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெறுவதற்காக வரவுள்ளதால் அதற்குரிய ஏற்பாடுகளை பார்வையிட வந்ததாக தெரிவித்தார்.
மேலும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் அறிக்கையை மாற்றுக் கருத்தாக கருதுவதாகவும் அவரின் கருத்தை ஏற்பதாகவும் கூறிய அமைச்சர், மாற்றுக்கருத்துக்கு இடம் அளிப்பதே ஆரோக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







