கூடலூர் பகுதியில் இரவு நேரத்தில் கிராமப் பகுதிக்குள் நுழைந்து குடியிருப்புகளை
உடைத்து சேதப்படுத்தும் PM 2 யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்
50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை உடைத்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும்
அரிசிராஜா எனப்படும் PM 2 மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில்
கூடலூர், பந்தலூர் மற்றும் நாடுகாணி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனச்சரகர்கள்
மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், வன உயிரின கால்நடை மருத்துவ குழுவினர்
கடந்த 16 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பகல் நேரங்களில் வனப்பகுதிகளுக்குள் சுற்றி தெரியும் இந்த காட்டு
யானை இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்புகளை உடைத்து
சேதப்படுத்தி அரிசி மற்றும் உணவுப் பொருட்களை சாப்பிட்டு வீட்டை சூறையாடும்
பழக்கத்தை PM 2 மக்னா என்ற யானை கொண்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாடந்துறை சுண்ட வயல் பகுதியில் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறி இரண்டு மூன்று குடியிருப்புகளை உடைத்து சேதப்படுத்தி மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள்
சென்றது.

இதனால் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் PM 2 மக்னா காட்டு யானையை விரைந்து
பிடிக்க யானையின் கால் தடத்தை வைத்து ட்ரோன் கேமராக்களை கொண்டு பகல்
நேரங்களில் வனப்பகுதிக்குள் சுற்றி திரியும் pm 2 காட்டு யானையை தேடும்
பணியில் வனத்துறையினர் ஈடுபட்ட நிலையில் யானையின் நடமாட்டம் எங்கும்
தென்படவில்லை.

இந்நிலையில் இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராம பகுதியில்
PM 2 காட்டு யானை நுழைவதை தடுக்க வனத்துறையினர் முண்டக்கொல்லி, வாச்சுகொல்லி பகுதிகளில் மரத்தின் மீது பரன்களை அமைத்து கிராமப் பகுதிக்குள் நுழையும் PM 2 காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து, வனத்துறையினர் நான்கு குழுக்களாக பிரிந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.







