மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் தாங்கள் படித்த பள்ளியில் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த தொட்டப்பநாயக்கணூரில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியானது நடுநிலைப்பள்ளியாக இருந்த காலக்கட்டத்தில் கடந்த 1983-1991-ம் கல்வி ஆண்டு வரை சுமார் 50 மாணவர்கள் பயின்றனர். அதில் சிலர் தற்போது வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் சுமார் 32 ஆண்டுகளுக்கு பின்னர் முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் சந்தித்து கொண்டனர்.
தாங்கள் பிறந்த ஆண்டான 1978 ஆண்டை மையக்கருவாகக் கொண்டு 78கிட்ஸ் சந்திப்பு என்ற பெயரில் இந்த சந்திப்பு நடைபெற்றது.பல ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்த மாணவர்கள் தங்களை மெய்மறந்து ஒருவரை ஒருவர் பார்த்ததும் ஆரத்தழுவி அன்பை பரிமாறி கொண்டனர்.
மேலும் தங்களின் பால்ய கால நினைவுகளை நண்பர்களுடன் சேர்ந்து அசை போட்டவர்கள் கேக் வெட்டியும், குழு புகைப்படம் எடுத்தும் உற்சாகமடைந்தனர். இதுகுறித்து முன்னாள் மாணவர்கள் கூறுகையில் தாங்கள் இன்று உலகின் எத்தனையோ மூலைகளில் இருந்தாலும், மீண்டும் சந்தித்துக்கொண்டது
தங்களை அளவிட முடியாத மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருப்பதாக தெரிவித்தனர்.
மேலும் இதனைப்போன்று ஆண்டுக்கு ஒருமுறையாவது சந்திக்க முடிவு செய்திருப்பதாகவும், தாங்கள் ஒன்றிணைந்து பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ
முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
-வேந்தன்







