அரசு பேருந்துகளில் ரூ.2000 நோட்டுகள் செல்லாது – தமிழ்நாடு போக்குவரத்து கழகம்!

தமிழ்நாடு அரசு பேருந்துகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. 2016-ம் ஆண்டு நவம்பரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும்…

தமிழ்நாடு அரசு பேருந்துகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

2016-ம் ஆண்டு நவம்பரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. இதனால் ரூபாய் நோட்டு புழக்கத்திற்கான தேவையை கருத்தில்கொண்டு 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் நிறைவேறியதாலும், போதுமான அளவுக்கு மற்ற ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததால் 2018 – 19ம் ஆண்டில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது நிறுத்தப்பட்டது. தற்போது ரூ.2,000 நோட்டுகளின் பயன்பாடு மக்களிடையே பெருமளவில் குறைந்துவிட்டது.

இந்நிலையில், ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும், 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை நாளை முதல் வங்கிகளில் மாற்றிக் கொள்ள முடியும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அத்தகைய நோட்டுகள் செப்டம்பா் 30-ம் தேதி வரை செல்லுபடியாகும் என்றும், அதுவரை அவற்றை வழக்கமான பணப்பரிவா்த்தனையில் தொடா்ந்து பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசு பேருந்துகளில் 2 ஆயிரம் நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், “ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.20,000/- வரை வங்கியில் வரவு வைக்க முடியும் அல்லது மாற்றிக் கொள்ள முடியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 2000 ரூபாய் நோட்டுகளை போக்குவரத்து கழகத்தால் வங்கியில் செலுத்த இயலாத நிலை உள்ளது. எனவே நாளை முதல் நடத்துநர்கள் அனைவரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு பக்குவமாக எடுத்துரைத்து 2000 ரூபாய் நோட்டுகளை வழித்தடத்தில் வாங்குவதை தவிர்க்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.” என கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.