மேலூர் அருகே நடைபெற்ற பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழாவில் பல வகையான
மீன்களை பிடித்து பொதுமக்கள் சமைத்து உண்டனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உறங்கான்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட
சூரத்தூர்பட்டி கிராமத்தில் உள்ள மடை கருப்பு கோயிலுக்கு சொந்தமான கண்மாயில்
பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பல வகையான மீன்களை பிடித்து
மகிழ்ச்சியுடன் சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலூர் அருகே உறங்கான்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சூரத்தூர்பட்டி கிராமத்தில்
உள்ள மடை கருப்பு கோயிலுக்கு சொந்தமான சுமார் 80 ஏக்கர் பரப்பளவிலான கண்மாய்,
கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையின் காரணமாகவும், முல்லைப் பெரியாறு
அணையிலிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீரின் மூலமும் முழு
கொள்ளளவை எட்டியது.
இதனை அடுத்து மடை கருப்பு கோயிலில் வேண்டுதல் நிறைவேறியவர்கள் கண்மாயில் மீன் குஞ்சுகள் வாங்கி விட்டனர். தற்போது மாசித்திருவிழா முடிவடைந்ததை தொடர்ந்து இன்று காலை கண்மாயில் உள்ள மீன்களை பொதுமக்கள் பிடித்துக் கொள்ள அனுமதிக்கப்படுவர் என சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு அறிவிப்பு செய்யப்பட்டு மீன்பிடித் திருவிழா வெகு விமரிசையாக
நடைபெற்றது.
இதற்காக ஆயிரக்கணக்கான பொது மக்கள் அதிகாலை முதலே கண்மாய் கரையில்
காத்திருந்தனர். ஊர் பெரியவர்கள் வந்து அனுமதி அளித்தவுடன் பொதுமக்கள்
அனைவரும் மொத்தமாக இறங்கி கண்மாயில் ஒரே நேரத்தில் மீன்களை பிடிக்க துவங்கிய
சிறிது நேரத்திலேயே கட்லா ரோகு கெளுத்தி அயிரை உள்ளிட்ட பல வகையான மீன்களை
பிடித்து மகிழ்ந்தனர். அவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்களை தங்கள் இல்லங்களுக்கு
கொண்டு சென்று இறைவனுக்கு படையல் இட்டு பின்பு சமைத்து சாப்பிடுவர்.இவ்வாறு
மீன்பிடி திருவிழா நடத்தப்படுவதன் மூலம் விவசாயம் செழித்து மக்கள்
ஒற்றுமையுடன் வாழ வழி வகுக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.