மதுரையில் 2 லட்சம் சதுர அடியில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்தில் என்னென்ன சிறப்புகள் அமையவுள்ளது என்பதை பார்ப்போம்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார், அதில் மதுரையில் 70 கோடி ரூபாய் மதிப்பில் 2 லட்சம் சதுர அடியில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்பதும் ஒன்று. மதுரையில் அமையவுள்ள இந்த நூலகத்தில் என்னென்ன சிறப்புகள் இடம்பெறவுள்ள என்பதை தற்போது பார்க்கலாம்.
கலைஞர் நினைவு நூலகம் என்ற பெயரில், 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த நூலகம் அமைய உள்ளது.8 தளங்கள் கொண்ட பிரமாண்ட கட்டிடமாக இது அமைக்கப்படவுள்ளது. 6 லட்சம் புத்தகங்களை கொண்ட நூலகமாக இது அமையும். இந்த நூலகத்தில் ஒரே நேரத்தில் 600 பேர் அமர்ந்து புத்தகங்களை வாசிக்க வசதிகள் செய்யப்படவுள்ளன.
கலைஞர் நினைவு நூலகம் 24 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
செம்மொழியாம் தமிழ்மொழி நூல்கள் வாசிக்க ஒரு தனிப்பிரிவு அமைக்கப்படவுள்ளது. ஆங்கில புத்தகங்கள், காலமுறை இதழ்கள், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், தத்துவவியல், அரசியல் அறிவியல், சமூகவியல், பொருளாதாரம், சட்டம் ஆகிய புத்தகங்களுக்கு தனித்தனி பிரிவுகள் அமைக்கப்படவுள்ளன.
மொழியியல், இலக்கியம், கணிதம் மற்றும் அறிவியல் தொடர்பான நூல்கள், மருத்துவம், வேளாண்மை, பொறியியல், விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய தலைப்புகளிலான நூல்களுக்கும் தனித்தனி பிரிவுகள் அமைக்கப்படவுள்ளன.
வரலாறு, புவியியல், சுயசரிதை, அரசு சார்ந்த கையெழுத்து பிரதிகள் போன்றவற்றை வாசிக்க தனித்தனி பிரிவுகளும் ஏற்படுத்தப்படவுள்ளன. கலைஞர் மற்றும் தமிழ் அறிஞர்களின் சிலைகள் நூலகத்தில் இடம் பெற உள்ளன. அதிநவீன வசதிகளுடன் கூடிய தனித்துவமான வாசிப்பு அறைகள் அமைக்கப்பட்ட உள்ளன.
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக பிரெய்லி அமைப்புடன் பேசும் புத்தகங்கள் கொண்ட பிரத்யேக பிரிவும் அமைக்கப்படவுள்ளது. கலைஞர் நினைவு நூலகத்தில் 400 இருக்கைகள் கொண்ட நவீன கலையரங்கமும் அமைக்கப்படவுள்ளது.100 மற்றும் 50 இருக்கைகள் கொண்ட இருவேறு நவீன கூட்டஅரங்குகளும் அமைக்கப்படவுள்ளன.மேலும், ஒலி ஒளி அமைப்புடன் கூடிய திறந்தவெளி அரங்கம். கலை, கலாச்சார மையங்கள் மற்றும் திறந்தவெளி அரங்குகளும் அமைக்கப்படவுள்ளன.
மெல்லிசை அமைப்புடன் கூடிய தோட்டம் மாற்றுத்திறனாளி, முதியவர்களுக்காக உணவகம் மல்டி மீடியா, செயற்கை தாவரங்கள், வரைபடங்கள் என குழந்தைகளுக்கான பிரத்யேக பிரிவும் அமைக்கப்படவுள்ளது. தானியங்கு முறையில் புத்தகம் வழங்குதல் மற்றும் திருப்பப் பெறும் வசதியும் இருக்கும். நூலகத்தின் 24 பிரிவுகளிலும் மல்டி மீடியா வசதியும் நூலகம் முழுவதிலும் அதிநவீன வை – பை வசதியும் செய்யப்பட்டிருக்கும்.







