சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கு விசாரணையை முடிக்க, 4 மாதங்கள் கூடுதல் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை-மகன் ஜெயராஜ் – பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இதனையடுத்து தந்தை – மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிடக்கோரி, ஜெயராஜின் மனைவி செல்வராணி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி முரளி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுவரை 40 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டுள்ளதாகவும்,105 சாட்சிகளில் 55 முதல் 60 சாட்சிகள் முக்கியமானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் வாரத்திற்கு 2 நாட்கள் வழக்கு விசாரிக்கப்படுவதாகவும், குற்றவாளிகளாகக் கருதப்படும் 9 பேரின் வழக்கறிஞர்களும் சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்வதால் காலதாமதம் ஏற்படுவதாகவும் மாவட்ட நீதிமன்றம் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கிற்கு 4 மாதங்கள் அவகாசம் அளித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.







