பாலியல் தொழில் தரகர்கள் காவல் துறையினருக்கு லஞ்சம் – ஆடியோ வெளியானதால் பரபரப்பு

சென்னையில் மசாஜ் மையங்களில் பாலியல் தொழில் தடையின்றி நடைபெற விபச்சார தடுப்புப் பிரிவு காவலர்களுக்கு தரகர்கள் லஞ்சம் கொடுத்து வருவது தொடர்பாக ஆடியோ வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடத்தப்படும் மசாஜ் மையங்களின் இடைத்தரகர்கள்,…

சென்னையில் மசாஜ் மையங்களில் பாலியல் தொழில் தடையின்றி நடைபெற விபச்சார தடுப்புப் பிரிவு காவலர்களுக்கு தரகர்கள் லஞ்சம் கொடுத்து வருவது தொடர்பாக ஆடியோ வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடத்தப்படும் மசாஜ் மையங்களின் இடைத்தரகர்கள், விபச்சார தடுப்பு
பிரிவு போலீசாரின் கெடுபிடிகளை சமாளித்து கண்டும் காணாதுபோல் இருக்க, ஒரு
மையத்திற்கு ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை மாதம்தோறும் விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு பணத்தை லஞ்சமாக கொடுத்து செயல்படுகிறார்கள். இதற்கு ஆதாரமாக, இடைத்தரகர்கள் விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு பணம்
கொடுத்ததற்கான ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை விபச்சார தடுப்பு பிரிவில் பணிபுரியும், மசாஜ் மைய புரோக்கர்களால்
அன்பாய் ஜெ.பி. என்று அழைக்கப்படும் காவலர் ஒருவருக்கு மாதம் தவறாமல்
மாமுல் பணத்தை கொடுத்து வருவதாகக் கூறும் அந்த புரோக்கர் பேசிய ஆடியோ பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் தொழில் தடையின்றி நடக்க மசாஜ் மையம் நடத்தும் உரிமையாளர் மற்றும் புரோக்கர்களிடம் இருந்து பணம் பெறுவதைப் பார்த்தால் மசாஜ் மையம் என பெயரைப் பயன்படுத்தி விபச்சாரம் தங்கு தடையின்றி நடந்து வருவது இதன் மூலம் உறுதியாகிறது.

இந்த ஆடியோ ஆதாரத்தை அடிப்படையாக வைத்து விபச்சார தடுப்புப் பிரிவு போலீசாரிடம் காவல் துறை உயர் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆடியோ மூலம் பாலியல் தரகர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு உடந்தையாக செயல்படுவது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டில் சென்னை காவல் துறையின் கீழ் செயல்படும்
விபச்சார தடுப்பு பிரிவில், ஆய்வாளர்களாகப் பணி புரிந்த சாம் வின்சண்ட், சரவணன் ஆகியோர் சென்னையில் விபச்சார தொழில் தங்கு தடையில்லாமல் நடக்க
தன்மானத்தை இழந்து தரகர்களிடம் பணம் பெற்று வருவதாக தமிழக லஞ்ச ஒழிப்பு
போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணம்
கைப்பற்றப்பட்டு, ஆய்வாளர்கள் இருவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ்
வழக்குப் பதிந்த நிலையில், இருவரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டது
குறிப்பிடத்தக்கது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.