மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் மழை நீர் ஒழுகி படுக்கைகள் நனைவதால் நோயாளிகள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில், மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் சிகிச்சைப் பெறுகின்றனர். தற்போது மதுரையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு கட்டடம் சேதமடைந்துள்ளது.
இதனால், மழைநீர் நீரில் படுக்கைகள் நனைந்துள்ளதால் இரவு நேரங்களில் கூட படுக்க முடியாமல் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும், வார்டு முழுவதும் மழை நீர் தேங்கி இருப்பதால் நோயாளிகளே பாத்திரங்கள் மூலமாக நீரை வெளியேற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பல்வேறு வார்டுகளிலும் இதே நிலை நீடிப்பதால், அங்கு சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.








