முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் தனுஷ் நன்றி!

காலை 6 காட்சிக்கு அனுமதியளித்த முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் விஜய் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி, தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி ஆறு காட்சிகளுக்கு மிகாமல் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரி ஆறு காட்சிகள் திரையிடவும் உத்தரவிட்டார்.

அந்தவகையில் நடிகர் தனுஷின் ஒம்(O.M) திரைப்படம் வருகின்ற வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) வெளியாக உள்ளது. இந்த நிலையில் காலை 6 காட்சிக்கு அனுமதியளித்த முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனுஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலரின் கூட்டு உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் உருவாவது.
அத்தகைய திரைத்துறையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய ஆதரவு, திரையரங்கிற்குச் சென்று திரைப்படங்களைப் பார்ப்பதும், அதன் மூலம் திரையுலகின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதும்தான்.

​வரும் நவம்பர் 20ஆம் தேதி வெளியாகவிருக்கும் “ஓம்” திரைப்படத்தின் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசிற்கும், மரியாதைக்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

காலை 6 மணி காட்சிக்கு வருகை தரும் ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்புடனும், பொறுப்புடனும், அடுத்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் நடந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். திரைப்படத்தைப் பார்த்து மகிழ்வதே உண்மையான கொண்டாட்டம்!
​அனைவருக்கும் அன்பும், நன்றியும்” எவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.