மதுரை பைகாரா பகுதியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட உயர் மின் கோபுர விளக்கை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரை பைக்காரா பகுதியில் ரூ.3.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின் விளக்கை திறந்து வைத்த பின்னர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் பல்வேறு அரசியல் மற்றும் உள்ளாட்சி விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாகவும், அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மண்டலத் தலைவர்களை ராஜினாமா செய்ய அறிவுறுத்தியதே ஊழல் நடைபெற்றதற்கான அடிப்படை இருப்பதை காட்டுவதாகவும் அவர் கூறினார்.
மாநகராட்சி ஆணையாளரே புகார் அளித்திருப்பதால், அரசு நிர்வாகமே ஊழல் நடந்துள்ளதாக ஒப்புக்கொண்டதாக அர்த்தம் என தெரிவித்த அவர், இது சாதாரண ஊழல் அல்ல; மாநகராட்சி ஆணையாளரின் கடவுச்சொல்லை (Password) திருடி நடத்தப்பட்ட நவீன வகை “மெகா ஊழல்” என்று குறிப்பிட்டார். மதுரையில் வெளிச்சத்துக்கு வந்துள்ள இந்த முறைகேடு மாநிலத்தின் பிற பகுதிகளிலும் நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இரண்டு ஆண்டுகளாக இந்த விவகாரத்தை தொடர்ந்து எழுப்பி வருவதாகவும், சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு ஒரு ஆண்டைக் கடந்தும் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். விசாரணையை விரைந்து முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றதே தங்களின் கோரிக்கை என்றும் தெரிவித்தார்.
முறைகேடு புகாரில் அனைவரையும் குற்றவாளிகளாக சித்தரிக்க முடியாது என்றும், தவறு செய்தவர்கள் மீது மட்டுமே சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சு.வெங்கடேசன் கூறினார்.
விஜய்க்கு ஒரு வருடம் அரசியல் அழுத்தம் தர வேண்டாம் என்ற அண்ணாமலையின் கருத்து குறித்து கேட்கப்பட்டபோது, அது அவரது தனிப்பட்ட கருத்து என்றார். தங்களின் நிலைப்பாடு வேறுபட்டது என்றும், தமிழக வெற்றிக் கழக அரசின் நல்ல திட்டங்களை வரவேற்பதோடு, விமர்சிக்க வேண்டிய நடவடிக்கைகளை விமர்சித்து வருவதாகவும் கூறினார். தூய்மைப் பணியை தனியாருக்கு ஒப்படைக்கும் முடிவை அரசு திரும்பப் பெற்றதை வரவேற்றதாகவும், திருப்பரங்குன்றம் தொடர்பான நல்ல நடவடிக்கைகளையும் ஆதரித்ததாகவும் தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகள் தனித்து போட்டியிடுவார்கள் என்ற சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கருத்து குறித்து, இடதுசாரி அணி என்பது தேர்தலுக்கான கூட்டணி அல்ல; அரசியல் மாற்றத்திற்கான கூட்டணி என்றும், இடதுசாரிகளின் ஒற்றுமையை யாராலும் பலவீனப்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.
அவர்லேண்ட் நிறுவன விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே தொடர்ந்து போராடி வருவதாக தெரிவித்த அவர், ஒப்பந்தப்படி தினமும் 916 டன் குப்பைகளை வெள்ளக்கல் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையில், அதற்கு பதிலாக மணல் மட்டுமே கொட்டப்படுவதாக குற்றம்சாட்டினார். இந்த புகாரை மாநகராட்சி ஆணையாளரே உறுதிப்படுத்தியுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மதுரை உலகின் மிக அதிக வெப்பம் பதிவாகும் நகரங்களில் ஒன்றாக மாறி வருவதாக குறிப்பிட்ட அவர், காலநிலை மாற்றம் மற்றும் குறைவான மழைப்பொழிவை கருத்தில் கொண்டு மாநில அரசும், மத்திய அரசும் முன்கூட்டியே பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் வெப்ப அலை பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
“ஒரே நாடு, ஒரே தேர்தல்” அமல்படுத்தப்பட்டால் தமிழக வெற்றிக் கழக அரசு கவிழும் என்ற அதிமுக கருத்து குறித்து பதிலளித்த அவர், “துர்கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது; அதிமுகவும் அந்த கனவை காணட்டும். தமிழக வெற்றிக் கழக அரசை எளிதில் கவிழ்க்க முடியாது” என்றார். மேலும், “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்பது இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், அதனை எதிர்த்து நாடாளுமன்றத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராடும் என்றும் சு.வெங்கடேசன் தெரிவித்தார்.




