ஒரு மாதம் முழுவதும் தயாராகி, அதிக நாட்கள் கொண்டாடப்படும் திருவிழா மதுரை சித்திரை திருவிழா தான்.
புகழ்பெற்ற இந்த திருவிழா உருவான வரலாறு சுவாரஸ்யமானது. மதுரை என்றாலே திருவிழா உணர்வு தானாக தொற்றிக் கொள்ளும்,பிறப்பு முதல் இறப்பு வரை கொண்டாடி தீர்ப்பார்கள் மதுரைக்காரர்கள். நாகரிகத்திலும், பண்பாட்டிலும் உயிர் துடிப்போடு இயங்குகின்ற ஒரு மாபெரும் நகரம் மதுரை.
மீனாட்சிக் கல்யாணமும், அழகரின் வைகை ஆற்று வைபவமும் மதுரை மக்களின் வாழ்வியலோடு கலந்துவிட்ட ஒன்று. ஒரு மாதம் முழுவதும் தயாராகி அதிக நாட்கள் கொண்டாடப்படும் ஒரே திருவிழா சித்திரை திருவிழா தான். இவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழா உருவான வரலாறு சுவாரஸ்யமானது.
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில் சார்பாக தனித்தனியாக திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வந்தன. ஆனாலும், அது பெரும்பாலும் சைவ-வைணவ மோதலாகவே முடிந்தது. சமயங்களிடையே ஒற்றுமையை உண்டாக்கவும், முயற்சியாகவே இரு விழாக்களும் இணைக்கப்பட்டுள்ளன. மாசி மாதம் நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாண திருவிழாவை, அறுவடை முடியாத நிலையில் வேளாண்மை பெருமக்களால் காணமுடியாமல் இருந்ததால் அந்த விழா சித்திரை மாதத்திற்கு மாற்றப்பட்டது.
ஆரம்பத்தில் மதுரை, சோழவந்தானில் நடந்த திருவிழா, பின்னர் மதுரை நகருக்கு மாற்றப்பட்டது. 400 ஆண்டுகளாக காலம் தொன்று தொட்டு,சித்திரைத் திருவிழா வரலாற்று பெருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது. இன்றும் மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு, மதுரை மக்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதியில் இருந்தும் பொதுமக்கள் வந்து குவிகின்றனர். சித்திரை என்றால் சுட்டெரிக்கும் வெயில், ஆனால் மதுரை மக்களுக்கோ கொண்டாடி தீர்க்கும் திருவிழா காலம்.









