வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தை காண வந்தபோது, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும், தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதனை காண லட்சக்கணக்கான மக்கள் குவிந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர். இதில், ஒருவர் தேனியை சேர்ந்த செல்வம் என்றும் மற்றொருவர் மதுரையை சேர்ந்த ஜெயலட்சுமி என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், நெரிசலில் சிக்கி 8 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
அண்மைச் செய்தி: கள்ளழகர் தீர்த்தவாரி நிகழ்வு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கும், தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவருக்கு 2 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், சித்திரை திருவிழாவின் தொடர்ச்சியாக மாலை வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலில் தங்கி அருள்கிறார். நாளை காலை தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க உள்ளார். நாளை இரவு இராமராயர் மண்டபபடியில் தசாவதாரம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








