மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 19ம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடை அம்மனுடன் சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மீனாட்சி அம்மன் மதுரை மாநகரின் ஆட்சி பொறுப்பேற்கும் விதமாக கடந்த 26ம் தேதி பட்டாபிஷேகம் சூட்டப்பட்டது. தொடர்ந்து, சிவபெருமானை அம்மன் போருக்கு அழைத்த நிகழ்வான திக்கு விஜயம் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 11-ம் நாளான இன்று மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. திருத்தேரோட்டத்தை முன்னிட்டு கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடை சமேதராக கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அழைத்து வரப்பட்டு அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான பெரியதேரில் சுந்தரேஸ்வர் பிரியாவிடை சமேதராகவும், சிறப்பு அலங்காரத்திலும், மீனாட்சியம்மன் சிறிய தேரிலும் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளினார்கள்
சுவாமி, அம்மனின் திருத்தேர்கள் மதுரையின் நகர வீதிகளான கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதிகளில் வலம் வருகிறது. தேரோட்டத்தை காண மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ள நிலையில் மதுரை மாநகர காவல்துறை சார்பில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட கவால்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு மாசி வீதிகள் முழுவதிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, மாசி வீதிகளில் உயரமாக செல்லும் மின் வயர்கள் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்திகள் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.







