ஆதரவற்றோர் இல்லம் என்ற பெயரில், குழந்தைகளை விற்பனை செய்த கும்பல் பிடிபட்டுள்ளது.
இல்லத்தில் சேரும் ஆதரவற்ற குழந்தைகளை நூதனமான முறையில் இந்த கும்பல் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து பார்க்கலம்.
உறவினர்களால் கைவிடப்படும் ஆதரவற்றவர்களை, பராமரித்து பாதுகாப்பதற்காக, கருணை மிக்க பல நல்ல உள்ளங்களால் ஆதரவற்றோர் இல்லங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்குள்ளும் ஒரு சில கறுப்பாடுகள் புகுந்து, மனிதர்களின் மனதில் இருக்கும் கருணையை கேள்விக் குறியாக்கியுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மதுரை சேக்கிப்பட்டியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணின் கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், ஐஸ்வர்யா 3 குழந்தைகளுடன் தவித்து வந்துள்ளார். இதனைப் பார்த்த அசாருதீன் என்பவர், ஐஸ்வர்யாவையும், 3 குழந்தைகளையும் அழைத்துச் சென்று, மதுரை ரிசர்வ்லைன் பகுதியில் உள்ள இதயம் ஆதரவற்றோர் மையத்தில் சேர்த்துள்ளார்.
இந்தநிலையில், கடந்த 11-ம் தேதி, ஐஸ்வர்யாவின் ஒரு வயது குழந்தை மாணிக்கம், உடல்நலம் பாதிக்கப்பட்டதால், நரிமேடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக ஐஸ்வர்யாவிடம் கூறி விட்டு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், சில வாரங்களாகியும் குழந்தை மாணிக்கம் மீண்டும் காப்பகத்திற்கு வந்து சேராததால், இது குறித்து ஐஸ்வர்யா கேள்வி எழுப்பிய போது, குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 28-ம் தேதி, குழந்தை மாணிக்கம், கொரோனா தொற்றால் இறந்து விட்டதாகவும், தத்தனேரி மயானத்தில் அடக்கம் செய்துவிட்டதாகவும் ஐஸ்வர்யாவிடம் கூறியுள்ளனர். மேலும், ஐஸ்வர்யாவை மயானத்திற்கு அழைத்துச் சென்று குழந்தை புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில், இறுதி சடங்குகளை செய்ய வைத்து, புகைப்படமும் எடுத்துள்ளனர்.
ஐஸ்வர்யாவை காப்பகத்தில் சேர்த்துவிட்ட அசாருதீன் காதுக்கு இந்த விவகாரம் சென்றதும், அவருக்கு ஏதோ பொறிதட்டியுள்ளது. விசாரணையில் இறங்கிய அவர், நரிமேடு ஆரம்ப சுகாதார நிலையம், மதுரை ராஜாஜி மருத்துவமனை ஆகிய இடங்களில் விசாரித்திருக்கிறார். அப்போது, குறிப்பிட்ட தேதியில் அப்படி ஒரு குழந்தை சிகிச்சைக்கு வரவே இல்லை என்றும், அன்றைய தேதியில் கொரோனா தொற்றால் எந்த குழந்தையும் இறக்கவே இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
சந்தேகமடைந்த அசாருதீன், காப்பக நிர்வாகிகளிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், நரிமேடு சுகாதார நிலையம், மதுரை ராஜாஜி மருத்துவனையில் குழந்தையை சேர்த்ததற்கான ஆவணங்கள், இறப்பு சான்றிதழ் என சளைக்காமல் ஆவணங்களை எடுத்துப் போட்டுள்ளனர் காப்பக நிர்வாகிகள். ஆனால், அவை அனைத்து போலியானவை என தெரியவந்ததால், அசாருதீன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், வருவாய்த்துறை, போலீசார் என அனைத்து தரப்பினரும் விசாரணையை தொடங்கியதும், காப்பக நிறுவனரான சிவக்குமார் தலைமறைவானார். போலீசார் விசாரணை தொடங்கிய போது, காப்பகத்தின் மர்ம பக்கங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
ஐஸ்வர்யாவின் குழந்தை மாணிக்கம் கொரோனா தொற்றால் இறக்கவில்லை என்பதும், இஸ்மாயில்புரம் பகுதியைச் சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. ஆனால், குழந்தை மாணிக்கம் இறந்துவிட்டதாகக் கூறி, ஏற்கனவே இறந்த வேறு குழந்தையின் உடலை அடக்கம் செய்து, அதற்கான ஆவணங்களை காப்பக நிர்வாகிகள் தயாரித்து வைத்திருந்துள்ளனர்.
விவகாரம் இத்துடன் ஓயவில்லை. அதே காப்பகத்தில் தங்கியிருந்த ஸ்ரீதேவி என்ற பெண்ணின் தனம் என்ற 2 வயது குழந்தையும் மாயமாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழந்தையும் இதேபோன்று குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, 2 குழந்தைகளையும் பத்திரமாக மீட்ட போலீசார், குழந்தைகளை வாங்கிய தம்பதிகள் மற்றும் காப்பக நிர்வாகிகளை கைது செய்தனர். மேலும், அந்த காப்பகம் எந்தவிதமான அனுமதியும் பெறாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், அந்த காப்பகத்தில் தங்கியிருந்த பலர் மர்மமான முறையில் மாயமாகியிருப்பதும், ஏராளமானோர் இறந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த இதயம் ஆதரவற்றோர் காப்பகத்தின் கிளை அலுவலகத்தில் சோதனை செய்த அதிகாரிகள், ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
இதற்கிடையே, மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு 14 வகையான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டன. இதில், குழந்தைகளுக்கு எந்தவிமான பாதிப்பு இல்லை என தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களிடம் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டனர்.
புகைப்பட கலைஞரான வாழ்க்கையைத் தொடங்கிய சிவக்குமார், கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின்போது, சமூக ஆர்வலராக உருவெடுத்துள்ளார். அதில் வருவாய் பார்க்கத் தொடங்கியதும், ஆதரவற்றோர் இல்லம் என தொழிலை விரிவுப்படுத்தி, காசு பார்க்கத் தொடங்கியுள்ளார். அவர் பிடிப்பட்டதும், மேலும் பல அதிர்ச்சிகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.