மதுரை கள்ளழகர் கோவில் மாசித் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது. இத்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் அழகர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாள் கோயில் தமிழகத்தின் தென்திருப்பதி என்றஅழைக்கப்படுகிறது. இக்கோயிலில் நடைபெறும் சித்திரை திருவிழா உலகப் புகழ் பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும். அதனைபோன்று மாசித் தெப்பத் திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
அதன்படி இந்தாண்டு மாசித்திருவிழா நேற்று மாலை கஜேந்திர மோட்சத்துடன் தொடங்கியது. இந்நிகழ்வில் உற்சவர் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் இன்று காலை சரியாக 7.30 க்கு தொடங்கியது. ஸ்ரீ தேவி பூதேவி சமேத கள்ளழகர் மேலதாளங்கள் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் தெப்பம் நோக்கி புறப்பட்டார்.
பொய்கைகரைப்பட்டி புஷ்கரணிக்கு செல்லும் வழியெங்கும் பக்தர்களுக்கு அருள்பாலித்து தெப்பதீர்த்தம் நோக்கி வந்து சேர்ந்த கள்ளழகர் தெப்பத்தில் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மண்டப்பத்தில் பக்தர்களுக்கு எழுந்தருள்கிறார். அழகர் இன்று பகல் முழுவதும் தெப்பத்திலேயே இருந்து மாலையில் மீண்டும் எழுந்தருள்வார்.பின்னர் மீண்டும் இரவு சுவாமி கள்ளழகர் கோவிலில் உள்ள தன் இருப்பிடம் போய் சேர்வார்.
இத்துடன் மாசித் திருவிழாவானது நிறைவுறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் ராமசாமி மற்றும் தக்கார் வெங்கடாச்சலம் ஆகியோர் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்தனர். மாசித் தெப்ப திருவிழாவைக் காண மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். விழாவிற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர்.







