மதுரை : குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மதுரை அலங்காநல்லூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்ன இலந்தைகுளம் ஊராட்சிக்குட்பட்ட மரியம்மாள்குளம் பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம்…

மதுரை அலங்காநல்லூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்ன இலந்தைகுளம் ஊராட்சிக்குட்பட்ட மரியம்மாள்குளம் பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் குடிதண்ணீர் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதையும் படியுங்கள் : கோமா நிலையில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ? – குடும்பத்தினரின் அதிகாரப்பூர்வ விளக்கம் இதோ!

இந்நிலையில், அவர்கள், குடிநீர் வேண்டி அலங்காநல்லூர் தனிச்சியம் பிரதான சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் இரண்டு நாட்கள் அப்பகுதிக்கு மின்சாரம் தடை செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

சாலை மறியல் குறித்த தகவல் அறிந்து வந்த ஊராட்சி மன்ற தலைவர் முருகன், துணைத் தலைவர் மெர்லின் குமாரி, ஊராட்சி செயலாளர் கவிதா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் மின்சாரத்தை சரி செய்து தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

– ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.