கடலூரில் அதிகாரிகள் உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் சுற்றுவட்டார பகுதிகளான கோமங்கலம், நல்லூர், கொடுங்கூர் ஆகிய பகுதிகளில் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அறுவடை பணிகள் நிறைவடைந்து நெல்லை விற்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே நெல்லிற்கு உரிய விலை கிடைக்காமல் அவதியுறும் விவசாயிகள், அரசு கொள்முதல் நிலையங்களும் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள் : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், “விருதாச்சலம் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அரசு கொள்முதல் நிலையங்களில் சாக்குப்பைகள் வழங்காததால், அறுவடைப் பணிகள் முடிந்து நெல்கள் வெறுமனே கொட்டப்பட்டவாறு உள்ளது. 25 நாட்கள் கடந்து விட்ட நிலையில், அரசு தரப்பில் இருந்து எவ்வித பதிலும் இதுவரை வரவில்லை.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கொட்டப்பட்டிருந்த நெல்கள் மழையில் நனைந்து வீணாகியுள்ளன. எனவே அரசு இதில் தலையிட்டு எங்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.
– வேந்தன்







