பேருந்து பேட்டரிகளை திருடியதாக இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் பால்வண்டியை இடித்ததற்காக, பழங்குடியின வாலிபரை வேனில் கட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூரச் சம்பவம் இப்போது நடந்துள்ளது.
மத்திய பிரதேசம் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ஆசாத் கான். இவர் பேருந்து பேட்டரிகளை திருடியதாகக் கூறி, சிலர் அவரை சரமாரியாகத் தாக்கினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த வீடியோவில், ஒருவர் கையில் பெல்ட்டுடன் நின்றுகொண்டு அவரை அடிக்கிறார். மற்றொருவர் அவரை காலால் எத்துகிறார். இன்னொருவர் அவர் மார்புக்கு அருகில் நிற்கி றார். ஏராளமானோர் கூடி நிற்கும் நிலையில், இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த இளைஞர் தரையில் படுத்தபடி தான் திருடவில்லை என்கிறார்.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, விசாரணை நடத்திய போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட டேனிஷ், குல்திப் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த மாநிலத்தில் தொடர்ந்து நடந்துவரும் இதுபோன்ற சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







