மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. இந்த நிலையில், அதிமுக தலைமை மீதுள்ள அதிருப்தி காரணமாக, அதிமுக எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, விராலிமலை சி. விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. ஏற்கனவே முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று, திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இதனால் தமிழகத்தில் மொத்தம் 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், காலியான தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழலில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளைத் தவிர்த்து மற்ற தொகுதிகளில் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6-ஆம் தேதி (நாளை மறுநாள்) இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த தேர்தலில் தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, அதிமுக, இடதுசாரிகள் மற்றும் நாம் தமிழர் என 5 முனைப் போட்டி நிலவுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் த.வெ.க. மரகதம் குமரவேலும், தி.மு.க. சார் பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மா.கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்பட மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதேபோல திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, தி.மு.க. சார்பில் சுகன்யா, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் லட்சுமணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதேபோல் சுயேச்சைகள் உள்பட இந்த தொகுதியில் மொக்கம் 22 பேர் போட்டியிடுகின்றனர். இதில் தவெக சார்பில் போட்டியிடுபவர்கள் அதிமுகவில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர் விஜய் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் ரோடு ஷோ நடத்தினார். மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இடைத்தேர்தலை ஒட்டி மதுராந்தகத்தில் 285 வாக்குச்சாவடிகளும், தாராபுரத்தில் 302 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இடைத்தேர்தலை ஒட்டி இரண்டு தொகுதிகளுக்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் காலை முதலே தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடியிலும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, அக். 9-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.