இலங்கை கடற்படையால் 20 தமிழக மீனவர்கள் கைது: முதல்வர் விஜய் கடிதம்!

இலங்கையில் காவலில் உள்ள தமிழக மீனவர்களை மீட்கக் கோரி,வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காவலில்
வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 மீனவர்களையும். 270 மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று (5.10.2026) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து, வெளியுறவுத் துறை அமைச்சர் தனிக்கவனம் செலுத்திட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 3.10.2026 அன்று இராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்ததோடு, அவர்களின் விசைப்படகையும் (பதிவு எண்: IND-TN-10-MM-0457) செய்துள்ளனர் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது தமிழ்நாட்டின் கடலோர மீனவச் சமூகத்தினரிடையே பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருவதாகவும் அக்கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்

மேலும், இராமநாதபுரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், பாரம்பரியமாகவே பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடித் தொழிலைச் செய்து தங்கள் வாழ்வாதாரத்தைப் பேணி வருகிறார்கள் என்றும். குறிப்பாக மீன்பிடிப்படகுகளே அவர்களின் முதன்மையான வாழ்வாதாரமாக விளங்குவதால், மீனவர்கள் கைது செய்யப்படுவதும். அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் அவர்களது குடும்பங்களுக்குப் பெருந்துயரத்தையும். பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விரைந்து மீட்பது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மிகவும் இன்றியமையாததாகும் என்றும் அக்கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சுட்டிக் காட்டியுள்ளார்.

இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது. இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைக்கான தற்போதைய அதிகாரப்பூர்வ அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது என்றும், இதற்கென அமைக்கப்பட்டுள்ள மீன்பிடி விவகாரங்கள் தொடர்பான இந்தியா-இலங்கை கூட்டுப் (India-Sri Lanka Joint Working Group on Fisheries) முறையில் புனரமைத்து, அதன் கூட்டத்தை விரைவாகக் கூட்டி, இருநாட்டு மீனவர்களின் பிரச்சனைகளுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வுகளைக் காண நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே, இவ்விவகாரத்தை இலங்கை அரசிடம் உடனடியாகக் கொண்டு சென்று, தற்போது இலங்கையில் காவலில் வைக்கப்பட்டுள்ள 20 தமிழ்நாட்டு மீனவர்களை விரைவாக விடுதலை செய்து தாயகம் அழைத்து வரவும். பறிமுதல் செய்யப்பட்டுள்ள 270 மீன்பிடிப் படகுகளை மீட்டுத் தரவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அக்கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.