1994ம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி கிரியோஜெனிக் இந்திய ராக்கெட் இன்ஜின் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாகக்கூறி கைது செய்யப்பட்டார் நம்பி நாராயணன். இவர் இந்திய அறிவியலாளரும் இஸ்ரோவின் முன்னாள் முக்கிய அதிகாரியும் ஆவார். வாயுக்களை திரவமாக மாற்றி அதை எரிபொருளாக பயன்படுத்துவது கிரியோஜெனிக் டெக்னாலேஜி ஆகும். அப்துல்கலாம் திடப்பொருட்களை எரிபொருளாக பயன்படுத்தி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவது பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்த போது, திரவ எரிபொருள் பயன்படுத்துவது குறித்து தொடர் ஆய்வு மேற்கொண்டிருந்தார் நம்பி நாராயணன்.
இவர் கைது செய்யப்படும்போது இந்திய விஞ்ஞானி பாகிஸ்தானுக்கு ரகசியங்களை விற்றுவிட்டார் என பரபரப்பாக பேசப்பட்டது. நீதிமன்றதுக்கு அவரை அழைத்துச்செல்லும் போது அவரை சூழ்ந்த பொதுமக்கள் ‘தேச துரோகி.. தேச துரோகி ’ என கோபமாக கோஷமிட்டனர். ஒரே நாளில் அவரின் புகழ் அனைத்தும் சிதைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கேரள புலனாய்வுத் துறையிடம் இருந்து மத்தியப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) இந்த விசாரணையை எடுத்துக் கொண்டது.
1996-ம் ஆண்டில் இது கேரள காவல்துறையால் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு எனவும் நம்பி நாராயணன் நிரபராதி எனவும் சி.பி.ஐ அறிக்கை அளித்தது. இதனைத்தொடர்ந்து நம்பி நாராயணனை விடுவித்தது நீதிமன்றம். அதற்குள்ளாக அவரின் பெயரும் புகழும் முற்றிலுமாக சிதைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் 50 நாட்கள் சிறையில் இருந்தார் நம்பி. சிறையில் இருந்தபோது தான் அடித்து துன்புறுத்தப்பட்டதுடன் பல்வேறு சித்தரவதைகளுக்கும் ஆளானதாக ‘Orbit of memories’ என்கிற தன் சுயசரிதை புத்தகத்தில் எழுதியிருந்தார் நம்பி. மேலும், ‘எனக்கு நேர்ந்தவை எல்லாம் ஏதோ ஒரு திரைப்படம் பார்ப்பது போலவும்.. அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நானே இருப்பது போலவும் எனக்குத் தோன்றியது’ எனவும் அவர் குறிப்பிட்டார்.
இப்போது அவரின் வாழ்க்கையை மையமாக வைத்தே ராகெட்ரி: நம்பி விளைவு (Rocketry: The Nambi Effect) எனும் திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார் நடிகர் மாதவன். 75வது கேன்(cannes) திரைப்பட விழால் கடந்த வியாழக்கிழமை இப்படத்தின் சிறப்பு திரையிடல் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாதவன், ‘ இந்திய சினிமாவில் அறிவியல் மற்றும் தொல்நுட்பம் சார்ந்த அசாதாரனமான கதைகளையும், தலைசிறந்த மனிதர்களையும் புறக்கணித்துள்ளார்கள். நம்முடைய நடிகர்களை விட அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆளுமைகளுக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். ஆர்யபட்டா முதல் சுந்தர் பிச்சை வரை மக்களின் மனம்கவர்ந்த பல்வேறு ஆளுமைகள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையை படமாக்கினால் நிச்சயம் மக்கள் கொண்டாடுவார்கள்’ என்று குறிப்பிட்டார்.
மேலும், ‘ஹாலிவுட்டை எடுத்துக்கொண்டால் நேரத்தை வளைத்து, நமது மூளையுடன் விளையாடும் பல அறிவியல் சார்ந்த படங்களை கொடுப்பதில் புகழ்பெற்றவர் கிறிஸ்டோபர் நோலன். அவரின் இண்டர்ஸ்டெல்லார் – இன்செப்சன் உள்ளிட அறிவியல் சார்ந்த படங்கள் வெளியாகும் போது விமர்சகர்கள் கூட திரையரங்கிற்கு செல்ல பயப்படுகிறார்கள். ஒருவேளை படம் சரியாக புரியாமல் விமர்சனத்தில் முட்டாள்தனமான கருத்துக்களை தெரிவித்துவிடுவோமோ என்கிற தயக்கம் அவர்களிடத்தில் இருக்கும். ஏனென்றால் ஒரு விஞ்ஞானியே அப்படத்தை எடுக்கிறார் என்கிற புரிதல் அவர்களிடம் இருக்கும். அந்தளவுக்கு தகுதிவாய்ந்தவராக நோலன் அறியப்படுகிறார். இப்பவும் அவருடைய இன்செப்டன் படம் எனக்கு முழுவதும் புரியவில்லை. ஆனால் அந்த இயக்குநரின் அறிவுத்திறன் மீது எனக்கு மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது. ஆடியன்ஸுக்கு தன்னுடைய படங்கள் முழுவதும் புரிகிறதா என்பது பற்றி அந்த இயக்குநர் கவலை கொள்வதில்லை’ என்றும் குறிப்பிட்டார்.
அதுமட்டுமில்லாத், ‘பிரதமர் மோடி டிஜிட்டல் பொருளாதாரத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்திய போது பொது மக்கள் இந்த நடைமுறையை விரும்பவில்லை. பொருளாதார வல்லுனர்களுக்கும் இந்தியாவுக்கே இது பேரழிவு என்று கருதினார்கள். குறிப்பாக கிராம மக்கள், படிக்காதவர்கள், விவசாயிகள் போன்றவர்கள் ஸ்மார்ட்போன் மற்றும் டிஜிட்டல் முறைகளை எப்படி தெரிந்து கொள்வார்கள் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. ஆனால் இப்போது அப்படி கிடையாது நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. தற்போது இந்தியா டிஜிட்டல் பொருளாதாரத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது பெருமை மிக்க தருணம்’ என்று புதிய இந்தியா திட்டத்தையும் பிரதமர் மோடியையும் பாராட்டி தள்ளிவிட்டார்.
இதனைத்தொடர்ந்து தனியார் யூ-டியூப் சேனலுக்கும் பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அப்போது, ‘விக்ரம் வேதாவுக்கு பிறகு பெரிய அளவிலான எந்த படமும் திரையரங்கிற்கு வராததால் கடந்த 4 ஆண்டுகளாக எந்த வருமானமும் இல்லாமல் இருந்தேன். முழுக்க முழுக்க ராக்கெட்ரி நம்பி விளைவு படத்திலேயே மூழ்கியிருந்தேன். இடையில் OTT-க்காக செய்த படங்களால் தான் நிதிநெருக்கடியை சமாளித்துக்கொண்டிருந்தேன். அப்போது வாழ்க்கையை பற்றி ஒரு நிரந்தர பயம் தொற்றிக்கொண்டது. அந்த சூழலிலும் எனக்கு முழு supportive-ஆக இருந்த என் மனைவிக்கு நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.’ என்று உள்ளம் உருக பேசினார். வரும் ஜூலை 1ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் மூலம் சினிமாவில் தன்னுடைய புதிய அத்தியாயத்தை எழுதவுள்ளார் மேடி மாதவன்.







