“தாராபுரம் வேட்பாளர் குறித்து மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது!” – பெ.சண்முகம்

தாராபுரம் வேட்பாளர் குறித்து மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது, அவர் வகித்த, வகிக்கும் பொறுப்புக்கு உகந்த செயல் அல்ல என்று பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இறுதிக்கட்டப் பரப்புரை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக். 2) தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, தவெக வேட்பாளர் சத்தியபாமா கட்சித் தாவியதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்துப் பேசினார். அப்போது, தவெக வேட்பாளர் சத்தியபாமாவை மு.க.ஸ்டாலின் உருவக்கேலி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு முதலமைச்சர் விஜய் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “உருவக்கேலி செயலில் யார் ஈடுபட்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்து வந்திருக்கிறது.

மூத்த அரசியல் தலைவர், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாராபுரம் வேட்பாளர் குறித்து சொல்லி இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. அவர் வகித்த, வகிக்கும் பொறுப்புக்கு உகந்த செயல் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.