“அநாகரிகமாக பேசும் திமுகவினரை மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்” – திருமாவளவன்

திமுகவினரின் இழிவான பேச்சை விசிக கண்டிக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“தலித் அரசியல் தமிழ்நாட்டில் தலித் அரசியல் மூலதனம், தலித் தேந்திரிய இயக்கத்தின் மாநில அமைப்பாளர் சவீதா அம்மையாரால் அறிமுகப்படுத்தப்பட்ட, அடையாளப்படுத்தப்பட்ட தலைவர் அண்ணன் மலைச்சாமியின் நினைவு நாள். என்னால் அவருடைய மகத்தான பங்களிப்பைக் கொண்டு வீரவணக்க நாள் நடைபெற்றது.

தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி களப்பணி ஆற்றும்.

இப்போது இடதுசாரிகள் எடுத்திருக்கின்ற முடிவு அவர்களுடைய அரசியல் உரிமை. அவர்கள் தனித்துப் போட்டியிடுகிறபோதிலும், அவர்களின் ஆதரவு தவெகவுக்கு தொடரும் என உறுதிப்படுத்தியுள்ளனர். இது தவெகவுக்கு எதிரான நிலைப்பாடு என மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி கருதவில்லை.

திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஒரு சிலர் நாகரிக வரம்புகளை மீறிக் கடுமையாகப் பேசியிருக்கிறார்கள். அமைச்சர் நிர்மல்குமாரைப் பற்றி எம்.பி. ஆ.ராசா பேசும்போது, தாயைப் பழிக்கும் வகையில் மிக இழிவான சொற்களால் வசைபாடியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தப் போக்கை விசிக கண்டிக்கிறது. பெரும் தலைவர்களால் பண்படுத்தப்பட்ட திமுகவைச் சேர்ந்த இன்றைய தலைவர்கள், இவ்வளவு கொச்சையான வார்த்தைகளால் அரசியல் எதிரிகளை விமர்சிப்பது என்பது கவலையளிக்கிறது. இந்தப் போக்கை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு அப்பகுதியில் உள்ள மீனவப் பெருங்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களின் உணர்வுகளை மதித்து, அதற்கேற்ப அரசு முடிவு எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.