பப்ஜி விளையாடி மலர்ந்த காதல்! சட்டவிரோதமாக இந்தியா வந்து இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண்!

பப்ஜி விளையாடி அதன் மூலம் காதல் மலர்ந்து, காதலனை கரம்பிடிப்பதற்காக சட்டவிரோதமாக இந்தியா வந்து இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண்ணின் காதல் கதை பற்றி இங்கே பார்க்கலாம்… பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், டெல்லி…

பப்ஜி விளையாடி அதன் மூலம் காதல் மலர்ந்து, காதலனை கரம்பிடிப்பதற்காக சட்டவிரோதமாக இந்தியா வந்து இந்துவாக மாறிய பாகிஸ்தான் பெண்ணின் காதல் கதை பற்றி இங்கே பார்க்கலாம்…

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், டெல்லி நொய்டாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து அவரை கரம் பிடிப்பதற்காக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து அவருடன் வாழ்ந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு தற்போது ஒன்றாக வாழந்து வரும் சூழலில், இவர்களது காதல் கதை குறித்த விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டெல்லி கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் மீனா என்ற 22 வயது இளைஞருக்கும், பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் என்ற 27 வயது பெண்ணுக்கும் கொரோனா காலத்தில் பப்ஜி விளையாடிய போது காதல் மலர்ந்துள்ளது. இதில் சீமா ஹைதருக்கு, குலாம் ஹைதர் என்ற நபருடன் ஏற்கனவே திருமணமான நிலையில், இந்த ஜோடிக்கு 4 குழந்தைகள் உள்ளன. கணவர் குலாம் சவுதி அரேபியாவில் வேலை செய்து வரும் நிலையில், சச்சின் மீது ஏற்பட்ட காதல் காரணமாக கிரேட்டர் நொய்டாவுக்கு தனது 4 பிள்ளைகளுடன் சென்று விடலாம் என முடிவு செய்த சீமா, முதல் முறை தனியாக இந்தியாவிற்கு வந்து சச்சினை சந்தித்து தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

பின்னர் கடந்த மே மாதம் தனது நான்கு குழந்தைகளுடன் கராச்சியிலிருந்து புறப்பட்ட அவர், துபாய்க்கு ஒரு விமானத்திலும், அங்கிருந்து காத்மாண்டுவுக்கு இணைக்கும் விமானத்திலும் பயணித்து தனது நான்கு குழந்தைகளுடன் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, உத்தரப்பிரதேசத்திற்குள் வந்து பின்னர் பேருந்தில் கிரேட்டர் நொய்டாவை அடைந்தார். பிறகு இருவரும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்வதற்காக வழக்கறிஞர் ஹைதரை அணுகிய போது போலீசாரிடம் சிக்கிய நிலையில், சீமா பாகிஸ்தானில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவில் நுழைந்ததால் கைது செய்யப்பட்டதோடு, அடைக்கலம் தந்தற்காக சச்சினும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, இவர்களின் காதலை சச்சினின் பெற்றோர் ஏற்றுக் கொண்டதால் அவர்களின் வீட்டில் தனது குழந்தைகளோடு சீமா தஞ்சமடைந்து உள்ள சூழலில், தனது முந்தைய வாழ்க்கை குறித்தும், தற்போதைய மாற்றம் குறித்தும் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். சவுதி அரேபியாவில் பணிபுரியும் அவரது கணவர் பாகிஸ்தானியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், தனது கணவர் அடித்து துன்புறுத்துவதாகவும், நான்கு ஆண்டுகளாக தனது கணவரை சந்திக்கவில்லை என்று கூறும் சீமா, சிந்து மாகாணத்தில் கைர்பூரில் இருக்கும் தனது பெற்றோருக்கு சொந்தமான வீட்டை ரூ.12 லட்சத்திற்கு விற்று தான் சச்சினை திருமணம் செய்து கொள்ள இந்தியா வந்ததாக கூறியுள்ளார்.

மேலும் தற்போது, தனது பெயரின் பின்னால் இருந்த தனது கணவர் ஹைதரின் பெயரை நீக்கி விட்டு இப்போது, அவரின் பெயர் சீமா சச்சின் என்று மாற்றிக் கொண்டுள்ளாராம். மேலும், தனது 4 பிள்ளைகளின் பெயர்களையும், ராஜ், பிரியங்கா, பாரி மற்றும் முன்னி என்று இந்து பெயர்களாக சீமா மாற்றியுள்ளாராம்.

இந்த நிலையில், தனக்கும், அவருடைய பிள்ளைகளுக்கும் இந்திய குடியுரிமை அளிக்கும்படி பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகிக்கு தாணும், சச்சினும் வேண்டுகோள் வைப்பதாக கேட்டுள்ளார். இந்நிலையில், சீமா ஹைதரின் கணவர் குலாம் எனது மனைவி மற்றும் குழந்தைகள் 4 பேரையும் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என மோடி அரசை தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக அறிவித்துள்ள நிலையில், சீமா இனி நான் பாகிஸ்தானுக்கு செல்லமாட்டேன் என்று கூறியுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.