கூண்டோடு காலியான சிராக் பஸ்வான் கட்சி: 22 மூத்த தலைவர்கள் திடீர் ராஜிநாமா!

போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் கோபமடைந்த 22 மூத்த தலைவர்கள் சிராக் பாஸ்வானின் கட்சியை விட்டு வெளியேறினர்.  பீகாரில் முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தலைமையில் இயங்கி வரும்…

போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் கோபமடைந்த 22 மூத்த தலைவர்கள் சிராக் பாஸ்வானின் கட்சியை விட்டு வெளியேறினர். 

பீகாரில் முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தலைமையில் இயங்கி வரும் கட்சி லோக் ஜனசக்தி.  இக் கட்சி வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்று 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்த நிலையில்,  2024 மக்களவைத் தேர்தலில் சீட்டு ஒதுக்கீட்டில் கோபமடைந்த பல தலைவர்கள் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியில் (ராம் விலாஸ்) விலகுவதாக அறிவித்துள்ளனர்.
முன்னாள் எம்.பி.யும், கட்சியின் மூத்த தலைவருமான அருண்குமார் ராஜினாமா செய்ததையடுத்து,  கட்சியில் இருந்து 2 தேசிய துணைத் தலைவர்கள் உட்பட 22 முன்னணி தலைவர்கள் இன்று ராஜினாமா செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தலைவர்களில் கட்சியின் தேசிய துணைத் தலைவர் ரேணு குஷ்வாஹா,  தேசிய பொதுச் செயலாளர் சதீஷ் குமார்,  பீகார் மாநில பொதுச் செயலாளர் ராஜேஷ் டாங்கி, பீகார் மாநில அமைப்புச் செயலாளர் ஈ. ரவீந்திர சிங் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் உள்ளனர்.
சீட்டு ஒதுக்கீட்டில் கட்சியின் அடிமட்டத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னரே,  கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜிநாமா செய்துள்ளதாக நம்பப்படுகிறது.  சீட்டு ஒதுக்கீட்டில் பணப் பரிவர்த்தனை நடந்ததாக பல தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும்,  பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் லோக் ஜனசக்தி கட்சியில் இருந்து வெளியேறிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.