மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மக்கள் யாரும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது 90 சதவிகிதம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நாளை முதல் தமிழ்நாடு முழுவதும்…

மக்கள் யாரும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது 90 சதவிகிதம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அத்துடன், கடைகள் திறப்பதற்கான நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  “தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா என்ற பெருந்தொற்றில் இருந்து மீண்டு வருகிறோம். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிட்டது. இந்தப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசால் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு விதிகளை முழுமையாகக் கடைப்பிடித்த நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி”  எனத் தெரிவித்துள்ளார். 

கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம் என்று சொல்லலாமே தவிர, முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று சொல்ல முடியாது என்ற அவர், “மக்கள் யாரும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. தளர்வுகள் அறிவித்துவிட்டார்கள் – அதனால் நாம் எந்த விதிமுறைகளையும் பின்பற்றத் தேவையில்லை என்று யாரும் நினைக்கக் கூடாது” எனத் தெரிவித்தார். 

கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசிதான் மிகப்பெரிய ஆயுதமும் கேடயமும் ஆகும். தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் முழுமையாக நாம் இன்னும் தடுப்பூசி போட்டு முடிக்கவில்லை. ஒன்றிய அரசால் நமக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியைப் போட்டுள்ளோம். அவர்களும் முழுமையாக நமக்கு வழங்கவில்லை. பள்ளிப் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுதல் குறித்து இன்னும் மருத்துவ வல்லுநர்கள் முடிவுகள் எடுக்கவில்லை என்றும் முதலமைச்சர் கூறினார்.

மேலும், “முழுமையான அளவுக்குத் தடுப்பூசிகள் கிடைக்காத நிலையில் மக்கள் இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருந்தாகவேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு நான் வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை. மக்கள் அனைவரும் தங்களுக்குத் தாங்களே சுயகட்டுப்பாட்டை விதித்துக்கொள்ள வேண்டும். விதிமுறைகளைப் பின்பற்றி நம்முடைய மதியால் கொரோனாவை வெல்வோம். நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்” என்றும் மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.  

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.